ஒரு குடும்பத்தின் 11 பெண்களை ஒரே ஒரு போன்காலில் காப்பாற்றிய தளபதி விஜய்
- IndiaGlitz, [Tuesday,May 12 2020]
சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடியில் 40 நாட்கள் தவித்து வந்த நிலையில் ஒரே ஒரு போன்காலில் அந்த 11 பெண்களையும் காப்பாற்றிய தளபதி விஜய் குறித்த செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். இந்த நிலையில் திடீரென காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டால் அவர்கள் 11 பேரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். தேவிகா தவிர அவரது குடும்பத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் 20 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கையில் இருந்த காசெல்லாம் செலவான பின்னர் பேருந்து நிலையங்களிலும் கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இந்த நிலையில்தான் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து தங்களுடைய நிலையை கூறினார்கள். உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிஸி ஆனந்த் அவர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்த விஷயம் உடனடியாக விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தளபதி விஜய் உடனடியாக தூத்துகுடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்து அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அந்த 11 பெண்கக்குளும் முறையாக அரசிடம் அனுமதி பெறப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனை அடுத்து சென்னையில் அந்த 11 பெண்களும் அவரவர் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே ஒரு போன் காலில் 40 நாட்களாக தூத்துகுடியில் தவித்த 11 பெண்களை தளபதி விஜய் காப்பாற்றியுள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.