தளபதி விஜய்யின் முதல் அரசியல் அறிக்கை.. பாஜக, திமுகவுக்கு எதிரான கருத்தா?

  • IndiaGlitz, [Tuesday,March 12 2024]

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிகள் இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

வரும் 2026 தேர்தல்தான் தனக்கு இலக்கு என்று விஜய் அறிவித்துள்ள நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் தனது கட்சியை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் அவ்வப்போது அறிக்கைகள் மூலம் அவர் தனது கட்சியின் தொண்டர்களுக்கு சில செய்திகளை சொல்லி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் முறையாக அரசியல் அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் நேற்று முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்த சிஏஏ சட்டத்திற்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இந்த அறிக்கையில் அவர், பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஆளும் திமுக இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த விடக்கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.