ஒரே இடத்தில் 'தளபதி 68' 'கங்குவா' படப்பிடிப்பு.. அடுத்தடுத்து ரிலீஸ் ஆக வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Thursday,December 14 2023]

விஜய் நடித்து வரும் ‘தளபதி 68’ மற்றும் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. விஜய், சினேகா, லைலா, மீனாட்சி, பிரபுதேவா, மோகன், பிரசாந்த் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு ஜூன் அல்லது ஜூலையில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக பாபிதியோல் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இன்று முதல் சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

’கங்குவா’ மற்றும் ’தளபதி 68’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரு படங்களும் ஒரு சில மாத இடைவெளியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.