சிஎஸ்கே அணியில் யோகிபாபுவை இணைக்கிறாரா தோனி.. அவரே அளித்த ஆச்சரியமான தகவல்..!

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

யோகிபாபுவை சிஎஸ்கே அணியில் இணைக்க சம்மதம் என்றும் ஆனால் ஒரு நிபந்தனை என்றும் தல தோனி என்று ’எல்.ஜி.எம்’ பட விழாவில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தல தோனியின் தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த ’எல்.ஜி.எம்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள மனைவி சாக்சியுடன் தோனி சென்னைக்கு வருகை தந்திருந்தார்.

இன்றைய விழா தொடங்கும் முன்பே ’யோகி பாபு நன்றாக கிரிக்கெட் விளையாடுவார், அவரை சிஎஸ்கே அணியில் சேர்த்துக் கொள்வீர்களா? அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு பதில் யோகிபாபுவை அணியில் இணைத்து கொள்ளலாமே? என தொகுப்பாளினி பாவனா கேட்டபோது இதற்கு நான் மேடையில் பதில் கூறுகிறேன் என்று தோனி தெரிவித்தார்.

இதனை அடுத்து அவர் மேடையில் பேசியபோது ’யோகி பாபுவுக்கு கிரிக்கெட் ஆர்வம் உள்ளது என்பதை எனக்கு நன்றாக தெரியும், அவரை சிஎஸ்கே அணியில் சேர்க்க நான் சிஎஸ்கே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை

யோகி பாபு மேட்ச் விளையாடும் நேரத்தில் சரியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும், அதேபோல் பிராக்டிஸ் செய்வதற்கு சரியாக வர வேண்டும், அவருக்கு அதற்கு சம்மதம் என்றால் நான் நிர்வாகத்திடம் பேசவும் தயார்

அதே நேரத்தில் பந்துவீச்சாளர்கள் ஸ்டெம்பை நோக்கி பந்தை போட மாட்டார்கள், பேட்ஸ்மேனை நோக்கி தான் பந்தை போடுவார்கள், அதை சமாளிக்கும் திறன் யோகி பாபு இருக்கிறதா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்’ என்று காமெடியாக தெரிவித்தார்.

தல தோனியின் இந்த காமெடியான பதில் தற்போது வைரலாகி வருகிறது..