'தல' அஜித்தை அடுத்து 'தல' அணி கொடுத்த ரூ.1 கோடி நிதியுதவி

கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக போராடி வரும் நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் உட்பட பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசுக்கு இதுவரை கிடைத்துள்ள நிதியுதவி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக அரசுக்கு இதுவரை மொத்தம் ரூ.134 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது.

அதில் அஜித் ரூ.50 லட்சம் தமிழக அரசுக்கு நிதியுதவி செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது தல தோனி கேப்டனாக இருக்கும் சிஎஸ்கே அணி ரூ.1 கோடி தமிழக அரசுக்கு நிதியுதவி செய்த தகவல் வெளிவந்துள்ளது. எனவே தல அஜித்தும், தல தோனியின் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தமிழக அரசுக்கு நிதியுதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடாஸ் சின்டல் ப்ரெயாஸ் கூட்டமைப்பு 5 கோடி ரூபாய், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் 5 கோடி ரூபாய், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் 3 கோடி ரூபாய், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் 2 கோடி ரூபாய், டீயூப் இண்வெஸ்ட்மெண்ட்ஸ் 2 கோடி ரூபாய், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 கோடி ரூபாய் காமராஜர் துறைமுகம் லிமிடெட் 1 கோடி ரூபாய், சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரூ.10,52,768 அளித்துள்ளதாகவும், மொத்தம் 134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.