தல அஜித்தின் விவேகம்' குறித்த முக்கிய புதிய தகவல்கள்
- IndiaGlitz, [Thursday,July 06 2017]
இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இயக்குனர் சிவா எடிட்டிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதால் இரவுபகலாக படக்குழுவினர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஜித் இந்த படத்தில் சர்வதேச இண்டலிஜெண்ட் ஏஜண்ட்டாக நடித்து வருகிறார். 'வேதாளம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்த அஜித், அதன் பின்னர் உடல்நிலை தேறி, இந்த படத்தின் கேரக்டருக்காக தினமும் அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை முறையான உடற்பயிற்சி செய்து தனது உடம்பை தயார் செய்தார். ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும், ஒப்புக்கொண்ட கேரக்டரை திரையில் உண்மையாக கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் அவருடைய அர்ப்பணிப்பு, உழைப்பு ஆகியவை, பல மடங்கு திரையில் தெரியவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
97% வெளிநாட்டிலும் வெறும் 3% சென்னையிலும் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான குளிர் உள்ள பகுதியான அதாவது மைனஸ் டிகிரி வெப்பநிலை உள்ள பல்கேரியாவில் சுமார் 150 நாட்கள் அஜித் உள்பட படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த பகுதியில் காலை ஒன்பது மணிக்குத்தான் சூரிய வெளிச்சமே வரும், அதுவும் 3 மணிக்கு மேல் இருட்டிவிடும். இந்த குறைந்த நேரத்திற்குள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் பல்கேரியா நாட்டின் ராணுவ தளம், ஹெலிகாப்டர், ராணுவ டேங்கர்கள் ஆகியவற்றை படப்பிடிப்புக்கு பயன்படுத்த தயாரிப்பாளர் அனுமதி பெற்று தந்துள்ளதால் படத்தின் ஆக்சன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளது.
அஜித் மனைவியாக குடும்பப்பெண்மணியாக நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு இது 47வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை நடித்த கேரக்டர்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று கூறலாம். மேலும் இன்னொரு முக்கிய கேரக்டரில் அக்சராஹாசன் நடித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விவேக் ஓபராய் இந்த படத்தில் அஜித்துக்கு இணையான இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்பட்டு வந்தாலும் இவருடைய கேரக்டரில் மிகப்பெரிய சஸ்பென்ஸ் உள்ளது என்பது சமீபத்தில் இயக்குனரின் பேட்டியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் மிலன், ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் ஆகியோர் தங்களது அதிகபட்ச உழைப்பை கொட்டியுள்ளனர். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று ஸ்டண்ட் காட்சிகளும் ஹாலிவுட் படத்தில் கூட இதுவரை வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்களும் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்த படத்தை பார்க்கும் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை தரத்தக்க திரை விருந்தாக இந்த படம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.