அஜித்தின் 'விவேகம்': பலம் மற்றும் பலவீனங்கள்
- IndiaGlitz, [Thursday,August 24 2017]
தல அஜித் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு திரைப்படம். இதுவரை வந்த இந்த படத்தின் விமர்சனங்கள் அஜித் ரசிகர்களுக்கு விருந்தான படம் என்றும், மற்றவர்களுக்கு ஒரு சராசரி படம் என்றும் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படத்தின் பலம் மற்றும் பலவீனம் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்
'விவேகம்' படம் குறித்து முதலில் குறிப்பிட வேண்டியது அஜித்தின் கடின உழைப்பு. அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஒரு குடும்பப்படத்திலோ, ரொமான்ஸ் படத்திலோ ஈசியாக ரிஸ்க் இல்லாமல் நடித்திருக்கலாம். ஆனால் ஒரு ஆக்சன் த்ரில்லர், அதிலும் கடுமையான பனியில் உடலை வருத்தி, உயிரையே ரிஸ்க் ஆக வைக்கும் கதையை தேர்வு செய்ததே ஒரு பெரிய துணிச்சல்தான். அதன்பின்னர் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் தன்மைக்கு சிறிதும் சமரசம் செய்யாமல் உடல் அளவிலும் மனதளவிலும் தயாராகி ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஒரு பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
அஜித்தை அடுத்து 2வது கதாநாயகனாக தயாரிப்பாளரை கூறலாம். பல திரைப்படங்கள் ஹாலிவுட் படத்துக்கு இணையாக என்று விளம்பரம் செய்யப்படுவதுண்டு. ஆனால் உண்மையாகவே ஹாலிவுட் தரத்தில் ஒரு சர்வதேச உளவாளி ஆக்சன் த்ரில்லருக்கு செய்துள்ள செலவு காட்சிகளின் பிரமாண்டத்தில் தெரிகிறது. குறிப்பாக கலை இயக்குனருக்கே கோடி கோடியாய் கொட்டியிருக்கின்றார். முழுக்க முழுக்க அஜித்தை நம்பியே தயாரிப்பாளர் செய்துள்ள முதலீடுக்கு நிச்சயம் பலன் இருக்கும்
முதல் பாதியில் காஜல் அகர்வாலின் கேரக்டர் தேவையா? என்ற நினைத்தவர்கள் இரண்டாவது பாதியில் அவரது கேரக்டருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்திருப்பார்கள். கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாமல் குடும்பப்பாங்கான அதே நேரத்தில் அழுத்தமான கேரக்டர் காஜலுக்கே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும்
படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்சன் காட்சிகள்.இதுவரை வந்த ஆக்ஷன் படங்களில் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தரத்திலும் உருவாக்கத்திலும் புதிய உயரத்தைத் தொட்டிருக்கிறது.. குறிப்பாக பைக் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் அஜித் எடுத்திருக்கும் ரிஸ்க், ஒரு நடிகராக அவரது அர்ப்பணிப்பு உணர்வைக் காண்பிக்கிறது.
இயக்குனர் சிவா படத்தில் பயன்படுத்தியிருக்கும் டெக்னாலஜி படத்தின் பிளஸ்களில் ஒன்று. கலை இயக்குனரை செமையாக வேலை வாங்கியதையும் குறிப்பாக சொல்லலாம். விறுவிறுப்பான திரைக்கதை, ஆங்காங்கே மாஸ் காட்சிகள், குறிப்பிட்டு சொல்லும் வகையில் அஜித்துக்கு பஞ்ச் டயலாக் என சிவாவின் பாணி ஆங்காங்கே தெரிகிறது.
அனிருத்தின் பின்னணி இசை கிளைமாக்ஸில் கொஞ்சம் சத்தம் அதிகமாக இருந்தாலும் மொத்தத்தில் சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிய நிலையில் அதற்கு தகுந்த விஷுவல்கள் பாடல்களுக்கு வலு சேர்க்கின்றன. சிவா-அனிருத் கூட்டணி தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
வெற்றியின் கேமிராவுக்கு ஓய்வே இல்லை. சேஸிங் காட்சிகளில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பது படத்தை பார்த்தாலே தெரிகிறது. ஹாலிவுட் கேமிராமேன்கள் நிச்சயம் இந்த படத்தை பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள்
எடிட்டர் ரூபனின் எடிட்டிங் மிக கச்சிதம். கிளைமாக்ஸ் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் அது அஜித் ரசிகர்களுக்கு போர் அடிக்காது என்பதால் கத்தரியை கைவைக்க அவருக்கு மனம் வரவில்லை போலும்.
இந்த படத்தின் பலவீனம் குறித்து சொல்ல வேண்டுமானால் நம்ப முடியாத, லாஜிக் இல்லாத காட்சிகள் அதிகம். நூறு பேர் மெஷின் துப்பாக்கியால் அஜித்தை நோக்கி சுட்டாலும் ஒரு குண்டு கூட நாயகன் மீது படாது என்பதை தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலா. சர்வதேச அளவில் பெரிய புள்ளிகளான பிசினஸ்மேன், அரசியல்வாதிகள், ஏஜெண்டுகள் ஆகியோர்கள் அடங்கிய 'சீக்ரெட் ஏஜன்ஸி' என்பது வசனத்தில் மட்டும்தான் வருகிறது ஆனால் காட்சிகளில் அஜித்துக்கும் விவேக் ஓபராய்க்கும் இடையே நடக்கும் போர் மட்டுமே காட்டப்படுகிறது.
விவேக் ஓபராய்க்கு ஏமாற்றம் அளிக்கும் கேரக்டர். இவர் அஜித்துக்கு எதிரியா? அல்லது புகழ் பாடுபவரா? என்று ஒரு கட்டத்தில் சந்தேகப்படும் வகையில் உள்ளது. அஜித்தை ஒவ்வொரு காட்சியிலும் திட்டுவதற்கு பதிலாக புகழ்கிறார். அனேகமாக ஒரு வில்லன் படம் முழுவதும் நாயகனை புகழ்ச்சியாக பேசுவது இந்த ஒரு படம் மட்டுமாகத்தான் இருக்கும்.
முதல் பாதியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்.
அக்சராஹாசனின் கேரக்டர் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய கேரக்டராக முதலில் சித்தரிக்கப்பட்டது. இந்த கேரக்டர் படம் முழுவதும் டிராவல் செய்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும். ஆனால் திடீரென சிறப்பு தோற்றமாக மாற்றியது நிச்சயம் ஒரு மைனஸ் தான்.
படத்தில் ஆங்காங்கே டுவிஸ்டுகள் இருந்தாலும் விவேக் ஓபராய் யார் என்ற டுவிஸ்ட் தவிர மற்ற டுவிஸ்டுகள் ஊகிக்கும் அளவிற்கே உள்ளது.
படத்தில் ஆங்கில வசனங்களும், ஹைடெக் தொழில்நுட்பமும் கொஞ்சம் அதிகம். பி மற்றும் சி செண்டர் ரசிகர்களுக்கு புரியுமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்
மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமைந்துள்ள இந்த படம் மற்ற ரசிகர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் ஸ்டைலான ஒரு தமிழ்ப்படமாக அளித்திருக்கும் படக்குழுவினர்களுக்கு நமது பாராட்டுக்கள்