கொஞ்சமாவது அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்: 'விவேகம்' எடிட்டர் காட்டம்

  • IndiaGlitz, [Friday,May 12 2017]

நேற்று அதிகாலை 12.01 மணிக்கு தல அஜித்தின் 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தென்னிந்திய சாதனைகளையும் தகர்த்தெறிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டிருந்த 12.01க்கு சில நிமிடங்களுக்கு முன்பே சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எடிட்டர் ரூபனின் உதவியாளர்களே காரணம் என்று ஒரு இணையதளம் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து காட்டமான ஒரு விளக்கத்தை எடிட்டர் ரூபன் தனது சமூக வலைத்தளம் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: "என்னுடைய உதவியாளர் யார் என்றாவது உங்களுக்குத் தெரியுமா? உங்களுடைய சுய விளம்பரத்துக்காக போலியான செய்திகளைப் பரப்ப வேண்டாம். எனது பெயரைக் களங்கப்படுத்தியதற்காக நான் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். சமூக ஊடகங்கள் தவறானவற்றை பரப்ப எளிதான கருவியாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் ஒரு வீடியோ சேனலை துவக்கி எதை வேண்டுமானாலும் பரப்பும் நிலையே உள்ளது. சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவு செய்வதற்கு முன் தயவுசெய்து சிறிதேனும் அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்" என்று கூறியுள்ளார்.
எடிட்டர் ரூபனின் விளக்கத்தை அடுத்து அந்த இணையதளம் எடிட்டர் ரூபனிடம் வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.