அஜித் குறித்து பலர் அறியாத 20 விஷயங்கள்
- IndiaGlitz, [Sunday,May 01 2016]
'தல' என்று அன்புடன் தனது ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் இன்று தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் 'தல அஜித்துக்கு' 'India Glitz' சார்பில் எங்களது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த இனிய நாளில் அஜித் குறித்து பலர் அறியாத சில விஷயங்களை அவரது ரசிகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.
1. அஜித் நடிப்பதில் மட்டுமின்றி சிறு வயதில் இருந்து மோட்டார் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸில் விருப்பம் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர் அறியாத ஒரு விஷயம் அஜித்துக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டின் மீது அலாதி பிரியம். பள்ளி நாட்களில் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்கினாராம்.
2. அஜித் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே தனது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக பலர் கூறுவதுண்டு. ஆனால் தனியார் கல்வி நிறுவனம் மூலம் அஜித் தனது 10வகுப்பை முடித்துவிட்டார் என்பதுதான் உண்மை.
3. அஜித் தனது 18 வயதில் ஒரு தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணியில் சேர்ந்தார்.
4. கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை அடுத்து அஜித், டெக்ஸ்டைல் தொழிலை சிலகாலம் செய்து வந்தார்.
5. டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபடும்போதுதான் அஜித்துக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
6. அஜித் நடித்த முதல்படமான 'அமராவதி' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ஊட்டிக்கு பைக்கிலேயே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
7. எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அஜித், 'அமராவதி' படத்தின் படப்பிடிப்புன்போதே கண்டிப்பாக நான் ஒரு பெரிய ஸ்டாராக ஒருநாள் வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினாராம்.
8. இயக்குனர்கள் அஜித்திடம் அன்றைய நாள் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்க முற்படும்போது தன்னுடன் சீனியர் நடிகர்கள் யாராவது நடிப்பதாக இருந்தால் முதலில் அவர்களுக்குரிய காட்சியை கூறிவிட்டு பின்னர் தனக்கு காட்சியை விளக்குமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொள்வார். சீனியர் நடிகர்களை அஜித் மதிக்கும் இந்த கொள்கையை அவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.
9. அஜித் எப்போதுமே ஓய்வு நேரங்களை வீணாக்குவதில்லை. பெயிண்டிங் வரைதல், போட்டோகிராபி, சமையல் என ஏதாவது ஒரு ஹாபியில் ஓய்வு நேரத்தில் ஈடுபடுவார்.
10. சூர்யா நடித்த முதல்படமான 'நேருக்கு நேர்' படத்தின் வாய்ப்பு அவருக்கு அஜித்தால்தான் கிடைத்ததாம். இதை சூர்யாவே ஒரு ரியாலிட்டி ஷோவில் கூறியுள்ளார்.
11.விஜய்யும் அஜித்தும் முதன்முதலில் சந்தித்தது அஜித்தின் அமராவதி ரிலீஸ் ஆன தினத்தில்தான். சென்னை கமலா திரையரங்கில் விஜய் 'அமராவதி' படம் பார்க்க தன்னுடைய நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது அஜித்திடம் விஜய் தானாகவே முன்வந்து தன்னை ஜோசப் விஜய் என்று அறிமுகப்படுத்தி கொண்டாராம்.
12. அஜித், விஜய் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. இனிமேல் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பார்களா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
13. விஜய் நடித்த 'குஷி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஜித் தானாகவே முன்வந்து கலந்து கொண்டார் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
14. இப்பொழுதும் விஜய், அஜித் இருவரும் முக்கிய நாட்களில் குடும்பத்துடன் சந்தித்து வருகின்றனர். ஆனால் இந்த சந்திப்பில் இருவருமே சினிமா குறித்து பேச மாட்டார்களாம்.
15. அஜித் எந்த ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதாக இருந்தாலும் தயாரிப்பாளரை தன்னுடைய வீட்டிற்கு வரச்சொல்லி அலைக்கழிக்க மாட்டார். தயாரிப்பாளர் வீட்டுக்கு அவரே சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். தயாரிப்பாளர்கள்தான் படைப்பாளிகள் மற்றும் முதலீடு செய்பவர்கள் என்றும் அவர்களுக்குரிய மரியாதையை தரவேண்டும் என்றும் அஜித் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறுவாராம்.
16. அஜித் மிகவும் சுவையான பிரியாணி செய்வார் என்பதுதான் பலருக்கு தெரியும். ஆனால் அவர் சாம்பார் செய்தால் தெருவே மணக்குமாம். அந்த அளவுக்கு சுவையான சாம்பாரை அவர் செய்வாராம்.
17. உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிடும்போது உணவு நன்றாக இருந்தால் உடனே கிச்சன் வரை சென்று சமையல் மாஸ்டரை பாராட்டுவதோடு, அந்த டிஷ்ஷை அவர் எப்படி செய்தார் என்ற விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்வாராம்.
18. அஜித் ஒரு அன்பான அப்பா என்பதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் மகள் அனோஷ்காவை அவரே பள்ளிக்கு காரில் அழைத்து செல்வாராம். மேலும் அனோஷ்காவுக்கு பல நல்ல பழக்கவழக்கங்களை கற்றுகொடுத்து வருகிறாராம். குறிப்பாக வீட்டிற்கு யார் வந்தாலும் அனோஷ்கா, வாங்க, உட்காருங்க, என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பாராம்..
19. அஜித் தன்னிடம் பணிபுரிபவர்கள் அனைவருக்கு வீடு கட்டி அவர்களுடைய பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்து வேலைக்கு வர இரண்டு சக்கர வாகனமும் வாங்கி கொடுத்துள்ளாராம்.
20. அஜித் எப்போதும் தனிமையை விரும்புபவர். சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை தவிர்ப்பதற்காகவே எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இணைந்து கொள்ளவில்லை.
அஜித்தை பற்றி கூறிக்கொண்டே போனால் இன்னும் ஆயிரம் விஷயங்கள் கூறலாம். எனவே இப்போதைக்கு இத்துடன் முடித்து கொண்டு, 'தல' அஜித்துக்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.