அஜீத்தின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

  • IndiaGlitz, [Tuesday,September 22 2015]

அஜீத்தின் அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள். ஒரு பார்வை

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்படும் அஜீத்தின் வசன உச்சரிப்பே மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்கும். அதிலும் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள் அதிர வைக்கும். பொதுவாக அஜீத் படங்களில் வரும் பஞ்ச் வசனங்கள் அவரது உண்மை வாழ்க்கையையும் பிரதிபலிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக 'பில்லா 2' படத்தில் அவர் பேசிய 'என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா' என்ற பஞ்ச் டயலாக் அவர் சினிமாவில் நுழைந்தது முதல் உச்சத்தை அடைந்தது வரை சந்தித்த கஷ்டங்கள், போட்ட திட்டங்கள் ஆகியவற்றை குறிப்பிடுவது என்பது குறிப்பிடத்தக்கது.பில்டப்புகள் அதிகம் இல்லாமல் இயல்பாகவே அவர் பேசும் பஞ்ச் வசனங்கள், ரஜினிக்கு பின்னர் மிகச்சரியாக பொருந்துவது அஜீத்துக்கு மட்டுமே என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. இனி அஜீத்தின் முக்கிய பஞ்ச் வசனங்களில் ஒருசிலவற்றை பார்ப்போம்.

சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு

அஜீத்தின் ஆஸ்தான இயக்குனர் என்று வர்ணிக்கும் அளவுக்கு பெயர் வாங்கிய விஷ்ணுவர்தன் இயக்கிய 'ஆரம்பம்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் தியேட்டரில் ஒலிக்கும்போது விசில் சத்தம் விண்ணை பிளக்கும். முக்கியமாக இந்த வசனத்தை பேசி முடித்தவுடன் 'Make it simple" என்று ஆவேசமாக கூறுவதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

எவ்வளவு தூக்குறோங்கிறது முக்கியமில்லை. எதை தூக்குறோங்கிறதுதான் முக்கியம்

அஜீத் நடித்த வெற்றி படங்களில் ஒன்றான 'வீரம்' படத்தில் இடம்பெற்ற இந்த மாஸ் வசனம் அஜீத் ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி அனைவரின் பாராட்டையும் பெற்ற வசனம். வில்லனின் ஆட்கள் அஜீத்தின் முப்பது லாரிகளை தூக்கியிருப்பார். ஆனால் அஜீத், வில்லன் மகன் செல்லும் ஒரே ஒரு காரை தூக்கிவிட்டு பேசும் வசனம் பஞ்ச் வசனம்தான் இது. அதிலும் கடைசியாக 'என்ன நான் சொல்றது' என்று முடிக்கும் ஸ்டைலே தனி ஸ்டைல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மெல்லிசான கோடு. கோடுக்கு இந்த பக்கம் இருந்தா நான் நல்லவன், அந்த பக்கம் போயிட்டா நான் ரொம்ப கெட்டவன். இந்த பக்கமா இல்ல அந்த பக்கமான்னு முடிவு செய்ற நேரம் வந்துச்சு

பொதுவாக கவுதம் மேனன் ஆக்சன் படம் எடுத்தாலும் ரொமான்ஸ் படம் எடுத்தாலும் அதில் அவர் பஞ்ச் டயலாக் வைப்பதில்லை. அவருடைய ஒவ்வொரு வசனமும் கவிதை போன்றே இருக்கும். ஆனால் 'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் படத்தின் முக்கிய காட்சியில் வந்த ஒரு பஞ்ச் வசனமாக மிகப் பொருத்தமாக வந்தது. இந்த வசனம் டீசரில் வெளிவந்தபோது, அதற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து கோலிவுட்டே அதிசயித்தது.

மரபுகளை மாத்த முடியாது. முயற்சி பண்ணினால் மனிதர்களை மாத்த முடியும். தலைவர்களை மாத்த முடியாது, முயற்சி பண்ணினா மக்களோட தலையெழுத்தை மாற்ற முடியும்

அஜீத்தின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'சிட்டிசன்' படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனம் இது. நீதிமன்றத்தில் சத்தியம் என்பது சம்பிரதாயம் என்பதை வாதிட்டுவிட்டு இந்த வசனத்தை பேசுவார். அஜீத்தின் அனல் பறக்கும் வசனங்களில் ஒன்று இது.

படிப்புக்கு காசு வேணும்ன்னா நான் தர்றேன். ஆனால் அந்த படிப்பே காசுன்னா நான் தரவே மாட்டேன்

'ரெட்' படத்தில் அஜீத் பேசிய வசனம் இது. இன்றைய கல்வி நிலையங்கள் வியாபார நிலையங்களாக மாறிவிட்டதை ஆணித்தரமாக, அழுத்தமாக கூறும் இந்த வசனத்துடன் கூடிய காட்சி இந்த படத்தின் மாஸ் காட்சிகளில் ஒன்று.

ஒருத்தனுக்கு ஆடத்தெரியலைன்னா ஆடிக் காண்பிச்சிரலாம், பாட தெரியலைன்னா பாடி காண்பிச்சிரலாம், வேலை செய்ய தெரியலைன்னா செஞ்சு காமிச்சிடலாம், ஆனா ஆம்பளை இல்லைன்னு சொன்னா....

வரலாறு படத்தில் இடம்பெற்ற இந்த பஞ்ச் வசனத்திற்கு பின்னர் அஜீத், தன் கைவிரலை சுழற்றும் அழகே தனி அழகுதான்....

உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது...

தீனா படத்தில் பொய்சாட்சி சொல்ல வரும் ஒருவனை அஜீத் மிரட்டுவதாக பேசும் பஞ்ச் வசனம் இது. ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய இந்த வசனத்தின்போது தியேட்டர் அதிரும் என்பதை படம் பார்த்த அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.

லைட்ட போட்டு வண்டி ஓட்டணும். லைட்டா போட்டு வண்டிய ஓட்டவே கூடாது

மங்காத்தா படத்தில் பிரேம்ஜியிடம் குடிபோதையிலும் தத்துவமாக அஜீத் உதிர்த்த காமெடி பஞ்ச் டயலாக் இது.

வாய் தப்பு செஞ்சா கண்ணு காட்டி கொடுத்துடும்

சரண் இயக்கத்தில் வெளிவந்த 'அசல்' படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் கண்களின் மூலம் ஒருவரின் உள்ளத்தில் மறைந்திருப்பதை அறியலாம் என்பதை எளிமையான ஒரு வசனத்தின் மூலம் புரிய வைத்த காட்சி இது.

நான் பார்த்து பார்த்து தண்ணி ஊத்தி வளர்த்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டு மரம்..வெட்ட நினைச்சே கோடாலி கூட உடைஞ்சிடும்

அமர்க்களம் படத்தில் அஜீத் திக்கி திக்கி இந்த வசனத்தை பேசினாலும், இந்த வசனத்தில் உள்ள காரம் கொஞ்சமும் குறையாமல் இருக்கும்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'தல 56' ப்டத்திலும் கண்டிப்பாக பஞ்ச் வசனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'வீரம்' படத்தில் பல பஞ்ச் வசனங்களை வைத்த இயக்குனர் சிவா, கண்டிப்பாக இந்த படத்திலும் அஜீத்துக்கு பொருத்தமான பல பஞ்ச் வசனங்களை வைத்திருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திருப்பூர் சுப்பிரமணியன் தலையீட்டால் முடிவுக்கு வந்த லிங்கா பிரச்சனை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என ஒருசில விநியோகிஸ்தர்கள்...

நியூசிலாந்தில் 'புலி' செய்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே...

21 வயது இளைஞரின் இயக்கத்தில் முதன்முதலாக ரகுமான்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் ரகுமான். புதுப்புது அர்த்தங்கள்...

'டார்லிங் II' ஆக மாறிய 'ஜின்'

மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் முக்கிய வேடத்தில் நடித்த 'ஜின்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது...

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வதில் ஸ்ருதிஹாசனுக்கு சிக்கலா?

நேற்று முன் தினம் மதுரை விமான நிலையத்தில் ஒருசில மர்ம நபர்களால் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்...