சென்னை வசூலில் புதிய வரலாறு ஏற்படுத்திய அஜித்தின் 'விவேகம்'
- IndiaGlitz, [Thursday,August 31 2017]
ஒரு நல்ல படத்தின் வசூலை எத்தனை எதிர்மறை விமர்சனங்களாலும் தடுக்க முடியாது என்பதை அஜித்தின் 'விவேகம்' மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் அதிகளவு எதிர்மறை விமர்சனங்களையும் பெற்று அதையும் மீறி கடந்த வியாழன் அன்று வெளியான அஜித்தின் விவேகம் சென்னையில் புதிய வரலாறு நிகழ்த்தியுள்ளது.
இதுவரை சென்னையில் ஒரு வாரத்தில் மிக அதிக வசூலை பெற்ற படமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' தக்க வைத்திருந்தது. இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் சென்னையில் ரூ.6.95 கோடி வசூல் செய்தது. ஆனால் இந்த சாதனையை விவேகம் திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.7.14 கோடி வசூல் செய்து முறியடித்துள்ளது. இதன்மூலம் சென்னையில் ஒரு வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விவேகம் பெற்றுள்ளது. இருப்பினும் கபாலி' வெளியான சமயத்தில் ஜிஎஸ்டி இல்லை என்பதும் தற்போது ஜிஎஸ்டி காரணமாக டிக்கெட்டின் விலை ரூ.120க்கு பதிலாக ரூ.153.60 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் சென்னை வசூல் அஜித் படங்களின் அதிகபட்ச ஒருவார வசூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித்தின் முந்தைய படமான 'வேதாளம்' கடும் மழை, வெள்ள நேரத்திலும் ஒரு வாரத்தில் ரூ.7.10 கோடி வசூல் செய்தது. ஆனால் 'விவேகம்' இந்த சாதனையையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் 6 கோடிக்கும் மேல் வசூல் செய்த 5வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் தமிழக மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒருவார வசூல் குறித்த தகவலை இன்னும் சிலமணி நேரங்களில் பார்ப்போம். அதுவரை இந்த பக்கத்தில் காத்திருங்கள்.