ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு: மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதி
- IndiaGlitz, [Thursday,July 02 2020]
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து அந்நாட்டின் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கடைகள், மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் அந்நாட்டின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் தற்போது பார்கள், இரவு நேரம் நடன விடுதிகள் ஆகியவையும் ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாலியல் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்களும் தற்போது மாஸ்க் அணிந்து பாலியல் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடந்த 37 நாட்களாக தாய்லாந்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் பாலியல் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஒருசில தளர்வுகளுடன் கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று பாலியல் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் போது மாஸ்க் அணிந்து ஈடுபட வேண்டும் என்றும், பார்களில் நடனமாடுபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. நடன கேளிக்கை விருந்துகளில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து நடனத்தை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.