வாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 கோடி ஜாக்பாட்… அதுவும் ஒரு வாந்தியால் வந்த அதிர்ஷ்டம்?

  • IndiaGlitz, [Friday,March 05 2021]

 


அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுமா என்று பலரும் கேட்டு இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு பெண்ணிற்கு அதிர்ஷ்டம் கடலில் இருந்து கரை ஒதுங்கி இருக்கிறது. அதுவும் ஒரு வாந்தியால் என்றால் நம்ப முடிகிறதா? உண்மையில் மிருகங்களில் திமிங்கலம் எடுக்கும் வாந்தி உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வாந்தியால் கிடைக்கும் கட்டி போன்ற ஒரு பொருள் அரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

தாய்லாந்தில் உள்ள நகோன் சி தம்மாரத் எனும் மாகாணத்தில் கடற்கரைக்கு அருகிலேயே வசித்து வருகிறார் சிரிபோர்ன் நியாம்ரின் எனும் பெண்மணி (49). இவர் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். இப்படி கடந்த 23 ஆம் தேதி வாக்கிங் சென்ற சிரிபோர்ன் கடற்கரையில் கிடந்த வெள்ளை நிறத்தில் ஒரு பொருளை பார்த்து இருக்கிறார். இதனால் ஆர்வமான சிரிபோர்ன் அதை தன்னுடைய வீட்டிற்கும் கொண்டு வந்துள்ளார். பின்னர் தன்னுடைய அண்டை வீட்டாரின் உதவியால் அது திமிங்கலத்தின் வாந்தி என்பதையும் தெரிந்து கொண்டார்.

பொதுவா திமிங்கலங்கள் உணவு செரிக்காமல் வாந்தி எடுக்கும்போது வெள்ளை நிறத்தில் திரவத்தை கக்கி விடுகிறது. அந்த திரவம் கட்டியான உடன் அம்பெர்கிரிஸ் என அழைக்கப்படுகிறது. இதை வைத்து உலகின் மிக விலை உயர்நத் வாசனை திரவங்கள் தயாரிக்கப்படுகிறதாம். அப்படி சிரிபோர்ன் கடற்கரையில் கண்டுபிடித்த 7 கிலோ எடைக் கொண்ட அம்பெர்கிரிஸ் மட்டும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடிக்கு விலைபோகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் சிரிபோர்ன் தற்போது கோடீஷ்வரராக மாறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.