Thadam Review
'தடம்' திரைவிமர்சனம் தரமான த்ரில்லர்
இயக்குனர் மகிழ்திருமேனியின் முந்தைய படங்கள் விறுவிறுப்பான த்ரில்லர் படங்களாக இருந்த நிலையில் அதே எதிர்பார்ப்பு இந்த படத்திற்கும் ஏற்பட்டிருந்தது. மேலும் அருண்விஜய்யும் இந்த படத்தில் மகிழ்திருமேனியுடன் மீண்டும் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. இந்த எதிர்பார்ப்பை இயக்குனர் நிறைவு செய்தாரா? என்பதை தற்போது பார்ப்போம்.
கவின், எழில் (அருண்விஜய்) என இரட்டையர்கள். வெறும் 16 வினாடிகள் இடைவெளியில் பிறந்தவர்கள் என்பதால் இருவருக்கும் டி.என்.ஏ கூட ஒரே மாதிரி இருக்கும். கருத்துவேறுபாடால் கவின், எழில் பெற்றோர் பிரிய, ஒருவர் தாயிடமும் இன்னொருவர் தந்தையிடமும் வளர்கின்றனர். இந்த நிலையில் ஒரு இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலை செய்தவர் கவின், எழில் இருவரில் ஒருவர் என்பது போலிசாருக்கு கிடைத்த ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ஆனால் டி.என்.ஏவில் கூட வித்தியாசம் இல்லாத இவர்கள் இருவரில் யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க ஒரு ஆதாரம் கூட போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு என்ன ஆனது? யார் கொலையாளி? போலீசார் கோட்டைவிட்டது எதை? தீர்ப்புக்கு பின் என்ன ஆனது? என்பதை த்ரில்லுடன் கூறுவதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
எழில், கவின் என இரண்டு வேடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே கெட்டப் என்றாலும் நடிப்பில் வித்தியாசப்படுத்தியிருக்கின்றார் அருண்விஜய். ஸ்டண்ட் காட்சிகளில் அசர வைக்கின்றார். படத்தின் பெரும் சுமையை தோளில் தாங்கி அதை கச்சிதமாக தனது நடிப்பில் நிறைவு செய்துள்ளார்.
தன்யா ஹோப் நாயகியாக இருந்தும் அதிக வேலையில்லை. மேலும் முதல் பாதி நாயகியின் ரொமான்ஸ் காட்சிகள் கதைக்கு வேகத்தடையாக உள்ளது. அருண்விஜய்யின் தாயாராக ஒருசில காட்சிகளில் சோனியா அகர்வால் வந்து மனதை கவர்கிறார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக வரும் வித்யா பிரதீப் கேரக்டரை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இயக்குனர் உருவாக்கியிருக்கலாம். அவருடைய விசாரணை ரொம்ப சாதாரணமாக உள்ளது.
யோகிபாபு இருந்தும் படத்தில் காமெடி சுத்தமாக இல்லை. மீரா கிருஷ்ணனை பல படங்களில் குடும்ப பெண்ணாக பார்த்துவிட்டு இந்த படத்தில் தம் அடிக்கும் ஒரு கிரிமினலாக பார்க்க முடியவில்லை.
அருண்ராஜின் இசையில் பாடல்கள் சுமார் என்றாலும் ஒரு த்ரில்லர் படத்திற்கான கச்சிதமான பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. சக்தி சரவணன் கேமிரா மற்றும் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு ஓகே ரகம். போலீஸ் ஸ்டேஷனில் இரு அருண்விஜய்யின் மோதும் ஸ்டண்ட் காட்சியில் அன்பறிவ் அசத்துகின்றனர்.
படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் மகிழ்திருமேனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதைதான். இந்த படத்தில் வரும் போலீஸ் கேரக்டர்கள் போலவே ஆடியன்ஸ்களுக்கும் அருண்விஜய் தான் கொலைகாரர் என தெள்ளத்தெளிவாக புரிகின்றது. ஆனால் எந்த அருண்விஜய் என்பதை படம் முடிவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் வரை அந்த சஸ்பென்ஸை ஊகிக்க முடியாதவாறு கொண்டு சென்ற திரைக்கதைக்கு ஒரு சபாஷ். கடைசியில் தற்செயலாக சப் இன்ஸ்பெக்டர் உண்மையான கொலையாளியை கண்டுபிடித்தும் எதுவும் செய்ய முடியாத நிலையை காட்சிகளால் கச்சிதமான இயக்குனர் விளக்கியுள்ளார்.
முதல் பாதியில் பார் பாட்டு, ரொமான்ஸ் காட்சிகள் யோகிபாபு காட்சிகள், என கதைக்கு தேவையில்லாத காட்சிகளை தவிர்த்திருக்கலாம். இருப்பினும் இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் செல்வதால் இந்த குறையை மறந்துவிடலாம்.
மொத்தத்தில் ஒரு கச்சிதமான த்ரில்லர் படம் தான் இந்த 'தடம்'
- Read in English