Thaanaa Serndha Koottam Review
தானா சேர்ந்த கூட்டம்: கலகலப்பான ஐடி ரெய்டு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்த பின்னர் எதிர்பார்ப்பின் சதவீதம் அதிகரித்தது. இந்த நிலையில் இந்த படம் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
தந்தை தம்பிராமையா பியூன் ஆக வேலை பார்க்கும் சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரியாக வேண்டும் என்பது சூர்யாவின் கனவு. அதற்கான தகுதிகளை வளர்த்து கொண்டபோதிலும் இண்டர்வியூவுக்கு சென்றபோது சிபிஐ அதிகாரியான சுரேஷ் மேனன், அவரை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார். அதன்பின்னர் சிபிஐ செய்ய வேண்டிய வேலையை தானே செய்ய முடிவெடுக்கும் சூர்யா, தனது டீமில் ரம்யாகிருஷ்ணன், செந்தில், சத்யன் ஆகியோர்களை சேர்த்து கொண்டு ரெய்டு நடத்துகிறார். நிஜ சிபிஐ போல் ரெய்டு செய்யும் சூர்யாவின் கூட்டத்தை பிடிக்க கார்த்திக் களமிறங்குகிறார். அதன் பின்னர் சூர்யாவுக்கும், கார்த்திக்-சுரேஷ்மேனனுகும் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம்தான் மீதிக்கதை
இதுவரை உள்ளூர் போலீஸ் முதல் உலக போலீஸ் வரை நேர்மையான காக்கிச்சட்டை அதிகாரியாக கலக்கிய சூர்யா, இந்த படத்தில் நெகட்டிவ் ஹீரோ கேரக்டரில் நடித்துள்ளார். இருப்பினும் ராபிஹூட் போல் அந்த பணத்தை கொண்டு நல்லது செய்கிறார். வேலை கிடைக்காத விரக்தி, கீர்த்தி சுரேஷூடன் காதல், அநீதியை கண்டு பொங்குதல் என ஒரே படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த சூர்யாவுக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பம் இந்த படத்தில் அவருக்கு கிடைத்துள்ளது.
'நானும் ரெளடிதான்' படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை பாடலுக்கு பயன்படுத்தும் நாயகியாக்கிவிட்டார். சூர்யாவின் போலி சிபிஐ டீமில் கீர்த்தி சுரேஷையும் சேர்த்திருந்தால் அவருக்கு கொஞ்சம் வலிமையான கேரக்டர் அமைந்திருக்கலாம்
சூர்யாவை அடுத்து இந்த படத்தில் ஸ்கோர் செய்வது ரம்யாகிருஷ்ணன் தான். சிபிஐ அதிகாரியின் ஆளுமை, குடும்ப செண்டிமெண்ட், போலீசிடம் பிடிபட்டபோதும் காட்டும் கம்பீரம் என நடிப்பில் கலக்கியுள்ளார்.
ஒரு படத்தில் ஹீரோவுக்கு எதிரான கதாபாத்திரங்கள் வலிமையாக இருந்தால்தான் ஹீரோவின் சாகசங்களுக்கு அர்த்தம் இருக்கும். அந்த வகையில் சூர்யாவுக்கு சவால் விடும் வகையில் சுரேஷ் மேனன், கார்த்திக் கேரக்டர்கள் இருப்பதால் படத்தில் எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையவில்லை. கார்த்திக், சுரேஷ் மேனனின் அனுபவங்கள் இந்த படத்திற்கு கைகொடுத்துள்ளது.
செந்தில், நந்தா, சத்யன், தம்பி ராமையா, ஆனந்த்ராஜ், என ஒரு நட்சத்திர கூட்டத்தையே படத்தில் கொண்டு வந்து அனைவருக்கு ஒருசில காட்சிகள் கொடுத்தாலும் மனதில் பதியும் கேரக்டர்கள் கொடுத்த விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள். அதேபோல் ஒருசில காட்சிகள் வந்தாலும் கலையரசன் கண்களில் நீரை வரவழைக்கின்றார். ஆர்.ஜேபாலாஜி வரும் காட்சிகளில் காமெடியும் செண்டிமெண்டும் கலந்து உள்ளது சிறப்பு
கமர்ஷியல் அம்சங்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ், பாடல்கல் என இயக்குனர் சமரசம் செய்து கொண்டாலும் ஒரு சீரியஸான விஷயத்தை எளிமையாக நகைச்சுவை முலாம் தடவி பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விக்னேஷ் சிவனின் திரைக்கதைக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த கதை நடக்கும் காலம் தற்போதைய டெக்னாலஜி காலமாக இருந்திருந்தால் நிச்சயம் லாஜிக் குறித்து அலச வேண்டிய நிலை ஏற்படும்,. ஆனால் 80களில் நடக்கும் கதை என்பதால் லாஜிக்கை மறந்துவிடலாம். அதேபோல் விக்னேஷ் சிவனின் வசனங்களில் தற்கால அரசியல் சமூக நிகழ்வுகளான சசிகலா, ஓட்டுக்கு பணம், வெளிநாட்டு குளிர்பானங்களை புத்திசாலித்தனமான புகுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கிளைமாக்ஸில் சூர்யாவிடம் கார்த்திக் பேசும் வசனங்கள் 'அயன்' படத்தின் கிளைமாக்ஸை ஞாபகப்படுத்துகிறது.
அனிருத்தின் இசையில் 'சொடக்கு பாடல் ஆட்டம் போட வைக்கின்றது. ரெய்டு நடக்கும் காட்சிகளில் அனிருத்தின் பின்னணி இசை அட்டகாசம். தினேஷின் கலர்ஃபுல் கேமிரா, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம். ஆக்சன் காட்சிகள் குறைவு என்றாலும் அதிரடிதான்.
மொத்தத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' விடுமுறை நாளில் ரசிக்கத்தக்க வகையிலான ஒரு படம் என்பதால் நிச்சயம் பார்க்கலாம்
- Read in English