வடிவேலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை
- IndiaGlitz, [Friday,September 14 2018]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலுவின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது.. இதுகுறித்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றபோது வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்தின் நோட்டீசுக்கு வடிவேலு தரப்பில் இருந்து திருப்தியான பதில் வராததால் 'இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும், அல்லது படத்தால் ஏற்பட்ட ரூ.9 கோடி நஷ்டத்தை வடிவேலு, இயக்குனர் ஷங்கரின் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் எச்சரித்தது. ஆனால் வடிவேலும் தரப்பில் இருந்து மீண்டும் எந்தவித பதிலும் வரவில்லை.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுக்கு தற்போது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு காட்டியுள்ளது. தயாரிப்பு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் யாரும் தங்களுடைய படத்திற்கு வடிவேலுவை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்பதுதான் அந்த ரெட்கார்டு. ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ததால் அறிவிக்கப்படாத ரெட் கார்டு வடிவேலுக்கு காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.