சாட்டிலைட் உரிமை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி முடிவு
- IndiaGlitz, [Sunday,May 21 2017]
ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அவர் தயாரிக்கும் படத்தின் சாட்டிலைட் உரிமை வியாபாரம் என்பது மிகவும் முக்கியமானது. படத்தின் பட்ஜெட்டின் ஒரு பெரும் பகுதி சாட்டிலைட் உரிமையில் இருந்தே கிடைத்துவிடும். ஆனால் சாட்டிலைட் தொலைக்காட்சிகள் ஒன்று சேர்ந்துகொண்டு சாட்டிலைட் உரிமையை மிகக்குறைந்த தொகை கொடுத்து பெறும் நடவடிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் தொகைக்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த படத்தை எந்த சாட்டிலைட் நிறுவனமும் வாங்காமல் ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இரண்டு புதிய சாட்டிலைட் சேனல்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், இனிமேல் புதிய தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே அந்த சேனலில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது.
சினிமா டிவி, சினிமா மியூசிக் என ஆரம்பிகப்படவுள்ள இந்த இரண்டு சாட்டிலைட் சானல்களில் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய படங்களின் பாடல்கள் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது முன்னணியில் இருக்கும் சாட்டிலைட் சேனல்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அதிரடி முடிவை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.