அபிராமி ராமநாதனுக்கு விஷால் நன்றி கடிதம்
- IndiaGlitz, [Sunday,July 16 2017]
அபிராமி திரையரங்க உரிமையாளரும், தமிழக திரையங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான அபிராமி ராமநாதன் நேற்று தனது திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு தனியாக கட்டணம் இல்லை என்று அறிவித்தார். இதனால் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.40 வரை செலவு மிச்சமாகியது. இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை வரவழைக்க முடியும் என்றும், அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே ஆன்லைன் முன்பதிவுக்கு என தனியாக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அபிராமி ராமநாதனின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் விஷால் கூறியிருப்பதாவது:
தற்போது நமது சினிமாத்துறை சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் மிகப்பெரிய ஒன்றான சினிமா டிக்கெட் இணையதள பதிவு முறையை தங்களது சென்னை அபிராமி திரையரங்குகளில் ரத்து செய்தது மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் பொதுமக்களும் பயன்பெறுவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ளது அனைத்து திரையரங்குகளுக்கும் முன் உதாரணமாக செயல்பட்டதற்கு எங்களது தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும், தமிழ் திரையுலகினரின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்' இவ்வாறு விஷால் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
விஷால் மட்டுமின்றி திரையுலகில் உள்ள பலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அபிராமி ராமநாதனின் முடிவுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.