ஊரடங்கு நேரத்திலும் திகிலூட்டும் தங்கத்தின் விலை!!! ஏன் இந்த நிலைமை???
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. யாரும் கடைகளில் தங்கத்தை விற்கவுமில்லை. விற்கும் விலைக்கு வாங்கும் நிலைமையிலும் மக்கள் இல்லை. ஆனாலும், தங்கத்தின் விலை மட்டும், கடந்த சில வாரங்களாக கிடு கிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. என்ன காரணம் என்று புரியாமல் சாதாரண மக்கள் விழிபிதுங்கி இருக்கின்றனர். இதனால், தங்கத்தின் வர்த்தகத்தில் என்ன நடக்கிறது? என்ற கேள்வி தற்போது பாமரனையும் தொற்றியிருக்கிறது.
இந்தியாவில் ஊரடங்கு மார்ச் 23 ஆம் தேதி இரவு முதல் அமலில் இருக்கிறது. இதனால் இந்தியாவில் சுமார் 2 லட்சம் கோடி மதிப்பிலான ஆபரணத் தங்கம் விற்பனையாகாமல் குவிந்து கிடக்கிறது. இதன் எதிரொலியாக நகைக்கடை விற்பனையாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி அக்ஷய திரிதியை வேறு வருகிறது. சாதாரண அக்ஷய திரிதியை நாட்களில் இந்திய சந்தைகளிலுள்ள கடைகள் கல்லாக்கட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் அது சாத்தியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் முதலீட்டில் இந்தியா உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியச் சந்தையில் தங்கம் ஆபரணமாகவும், முதலீடாகவும் அதிகளவில் விற்பனையாகிறது. எவ்வளவு விலை அதிகரிப்பு என்றாலும் சாமானிய மக்களின் முதலீட்டில் தங்கம் முதன்மை இடத்தைப் பெறுகிறது. ஒவ்வொர் ஆண்டும் இந்தியாவில் 800 டன் முதல் 900 டன் வரை ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 350 டன் வெறுமனே முதலீட்டு வடிவங்களில் விற்பனை ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த முதலீட்டுக் மனப்பான்மைதான் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. தங்கமானது வெறுமனே கடைகளில் மட்டும் வாங்கப்படுவதில்லை. ஆன்லைன் வர்த்தகம், பங்குச் சந்தை முதலீடு, இணையவழி தங்கம், பேப்பர் தங்கம் மற்றும் பத்திரத் தங்கம் என பல வழிமுறைகளில் தங்கம் ஆபரணமாகவும் வர்த்தக முதலீடுகளாகவும் வாங்கப்படுகின்றன. தங்கத்தின் வர்த்தக முதலீடுகளுக்கு கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லாத காரணத்தால் தங்கத்தின் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ரெப்கோ வட்டிவிகிதம்
கொரோனா நேரத்தில் தங்கத்தின் முதலீடு அதிகரிப்பதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா நேரத்தில் சரிந்துள்ள பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டது. வங்கிகளில் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்களின் வட்டி விகிதம் அதாவது ரெப்கோ வட்டிவிகிதம் 3.75% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வட்டி விகிதக் குறைப்புத்தான் தற்போது முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் ஈர்த்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடங்கியுள்ளன. எனவே தங்கத்தின் முதலீடு என்பது மிகவும் பாதுகாப்பானதான உணரப்படுகிறது. அது மட்டுமின்றி எளிதில் மாற்றத்தக்க வசதியும் தங்கத்தின் முதலீட்டுக்கு உண்டு. தற்போதுள்ள சூழ்லையைப் பொறுத்தவரை வர்த்தக முதலீட்டில், தங்கத்தில் முதலீடுதான் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவை மத்திய அரசு 30% குறைத்தும் அறிவிப்பு வெளியிட்டது. அதாவது முந்தைய ஆண்டு வாங்கின தங்கத்தின் அளவான 690 டன் தங்கத்தில் 30% குறைக்கப் பட்டுள்ளது. எனவே இந்தியாவில் தங்கத்திற்கான தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. அதோடு இந்தியாவில் உள்ள சில்லறை முதலீட்டாளர்கள் 10 முதல் 10 விழுக்காடு தங்கத்தில்தான் முதலீடு செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களும் தங்கத்தின் விலையேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகம் முழுவதும் பொருளாதார வர்த்தகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைந்து மந்தநிலையை அடைந்திருக்கின்றன. அதோடு, கடந்த சில தினங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.76 ஆக குறைந்து இருக்கிறது. இத்தகைய காரணங்களும் தங்கத்தின் விலையேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது முதலீட்டாளர்களை பொறுத்தவரை, டாலர் மற்றும் தங்கம் இரண்டும் சரிநிகராக அதிகரித்து காணப்படுவதுதான் விந்தையாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொதுவாக டாலர் மதிப்பு அதிகரிக்கும்போது தங்கத்தின் மதிப்பு குறைந்து காணப்படும். மேலும், டாலர் மதிப்பு குறையும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கும். இந்நிலைமையைத்தான் இந்தியா இதுவரை சந்தித்து வந்தது. ஆனால் கொரேனா இதையும் மாற்றியிருக்கிறது.
”இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ள தருணத்தில் தங்கத்தின முதலீடுகளின் அளவு அதிகரித்திருக்கின்றன. ஒருபக்கம் தேவையும் அதிகரித்து இருக்கிறது. வங்கி முதலீட்டின் வட்டி விகிதமான ரெப்கோ விட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்துள்ளது. கொரோனா நேரத்தில் தங்கத்தின் முதலீடு பாதுகாப்பாக கருதப்படுகிறது” இப்படி பல காரணங்களால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது. இதேநிலைமை நீடிக்குமானால் இன்னும் 3 வருடங்களுக்கு தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது எனவும் தங்கத்தின் முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் “கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்திக்கும்” என கடந்த வாரங்களில் எச்சரித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலைமையில், பொருளாதார மந்தம், உள்நாட்டு உற்பத்தி குறைவு, ஊரடங்கு நிலைமை போன்றவை இந்திய மக்களை பெரும் ஆபத்தில் தள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. பொருட்களின் விலையும் ஒருபக்கம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.
தேவை அதிகமாக இருந்தாலும் மக்களிடம் வாங்கும் திறன் மிகவும் குறைவு. தங்கத்தின் விலையேற்றத்திலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். காரணம் இந்திய கலாச்சாரத்தைப் பொறுத்தவரை தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமின்றி கௌரவத்திற்கான ஒரு அங்கீகாரமாகவும் இருந்து வருகிறது. எனவே கொரோனா முடிந்து இந்நிலைமை சரிசெய்யப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் ஒவ்வொரு இந்திய பாமரனும் காத்திருக்கிறான். காத்திருப்புக்கு காலம் பதில் சொல்லட்டும்.