கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!! 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மருத்துவமனையில் 40 க்கும் மேற்பட்ட நேயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும் அம்மாவட்ட எஸ்.பி. ஸலா தகவல் தெரிவித்து உள்ளார். இத்தீ விபத்துக்கான காரணம் எதுவும் வெளியாக நிலையில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி விபத்துக் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் முதன்மை செயலர் சங்கீதா சிங் தலைமையில் விசாரணைக்குழு ஏற்படுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஷ்ரே மருத்துவமனையின் 4 வது மாடி கட்டிடத்தில் இத் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 4 வது மாடியில் ஐசியூ வார்டு இருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மற்ற நோயாளிகள் அருகில் உள்ள எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். அதன்படி உயிரிழந்த கொரோனா நோயாளிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.