உக்ரைன் குழந்தைகளுக்காக மனம் இறங்கிய அமெரிக்க வீரர்… நெகிழ்ச்சி தகவல்!

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தனது ஒரு வருட வருமானத்தை அன்பளிப்பாகக் கொடுக்க முன்வந்துள்ளார். இந்தச் செயலைப் பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் 2 வாரங்களைக் கடந்து தொடர்ந்து போர்ச்சூழல் நிலவி வருகிறது. 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டாவுடன் இணைவதற்கு இனிமேல் உக்ரைன் விருப்பம் தெரிவிக்காது என நேற்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கையால் அந்நாட்டில் உள்ள 7.5 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக யுனிசெஃப் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து யுனிசெஃப்புடன் இணைந்து உக்ரைன் நாட்டு குழந்தைகளுக்கான அவசரகால மருத்துவம், வளர்ச்சிக்கு உதவும் கிட்டுகள் மற்றும் கல்வி, சுகாதாரம், பள்ளி உள்கட்டமைப்பு வசதியைச் சீர்ப்படுத்துதல் தொடர்பான விஷயங்களை செய்து கொடுக்க முன்வந்துள்ளார் ஆண்டி முர்ரே. மேலும் இதற்காக தனது 2022 ஆவது ஆண்டுகால வருமானத்தை அன்பளிப்பாக கொடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பிரபல டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆண்டி முர்ரே எடுத்துள்ள இந்த முடிவு பலரது மத்தியிலும் பாராட்டைக் குவித்திருக்கிறது.