பள்ளி மாணவியை கடித்த பாம்பு! ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்!
- IndiaGlitz, [Thursday,November 21 2019]
10 வயது பள்ளிச் சிறுமியை பாம்பு கடித்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஒரு பள்ளியில் 10 வயது ஷீலா என்ற சிறுமி படித்து வந்தார். இவர் வகுப்பறையில் இருந்தபோது திடீரென அங்கு புகுந்த பாம்பு ஒன்று ஷீலாவை கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷீலா வலி தாங்க முடியாமல் வகுப்பு ஆசிரியரிடம் இது குறித்து கூறியுள்ளார். ஆனால் சிறுமி பாம்பு கடித்ததாக ஏமாற்றுவதாக கூறி அவரை வகுப்பறையிலேயே உட்கார வைத்திருந்தார்.
சில நிமிடங்களில் ஷீலாவின் கால்கள் நீல நிறமாக மாற தொடங்கியதும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அது குறித்து வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளனர். அதன் பின்னரும் செவிமடுக்காத ஆசிரியர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வகுப்பறையிலேயே உட்கார வைத்து இருக்கின்றார்.
மாணவியின் தந்தை அவசர அவசரமாக வந்து ஷீலாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். எனினும் பாம்பு கடித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டதால் விஷம் உடல் முழுவதும் பரவி விட்டதாகவும் உடனடியாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு செல்லும் படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் கோழிக்கோடு மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அந்த சிறுமி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
பாம்பு கடித்த உடனே ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி இருந்தால் பரிதாபமாக ஒரு உயிர் பலி ஆகி இருக்காது என்றும் ஆசிரியரின் அலட்சியத்தால் ஒரு பள்ளி மாணவியின் உயிர் பலியாக இருக்கிறது என்றும் ஷீலாவின் வகுப்பு மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஷீலாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.