10 லட்ச ரூபாயில் ஒரு தமிழ்ப்படம்: வரும் வெள்ளியன்று ரிலீஸ்!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

தமிழ் சினிமாவின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. ஹீரோக்கள் சம்பளம் கோடியில், ஹீரோயின்கள் சம்பளம் லட்சத்தில் காமெடி நடிகர்களின் சம்பளம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் என குறைந்தது ரூ.50 கோடி இல்லாமல் ஒரு படம் தயாரிக்க முடியாது. இதுவே முன்னணி நடிகர்களின் படம் என்றால் பட்ஜெட் ரூ.100 கோடியை நெருங்கிவிடும்

இந்த நிலையில் வெறும் ரூ.10 லட்சம் செலவில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கப்பட்டு அந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. அந்த படம் தான் 'ழகரம்'. ஒரு புதையலை தேடி செல்லும் நான்கு இளைஞர்களுக்கு நேர்ந்த அனுபவம் தான் இந்த படத்தின் கதை. நந்தா, ஈடன், விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் ஆகிய மூவர் ஒளிப்பதிவு செய்ய தரன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து பற்றி இயக்குநர் க்ரிஷ் கூறுகையில், ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று கதை பயணிக்கிறது. 10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது சவாலான விஷயமாக இருந்தது. இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல. நண்பர்கள் பலர் உதவியுடன் படம் உருவாகியுள்ளது'' என்று கூறியுள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் மூன்று நாள் ஓடினாலே மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது