மாநகராட்சிகளில் கோவில், தர்கா, சர்ச் திறப்பது குறித்து முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், மசூதிகள், தர்க்காக்கள், தேவலாயங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10.8.2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் 10.8.2020 முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மாவின்‌ அரசு, கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்குத்‌ தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும்‌, சிகிச்சைகளை அளித்தும்‌, நிவாரணங்களை வழங்கியும்‌ முனைப்புடன்‌ செயல்பட்டு வருகிறது. நோய்த்‌ தொற்றின்‌ போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின்‌ ஒத்துழைப்பையும்‌, நோய்த்‌ தொற்றின்‌ நிலையையும்‌ கருத்தில்‌ கொண்டு, ஊரடங்கில்‌ படிப்படியாக தளர்வுகள்‌ வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும்‌ நகராட்சிப்‌ பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோயில்கள்‌, சிறிய மசூதிகள்‌, தர்க்காக்கள்‌, தேவாலயங்கள்‌ ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ உள்ள சிறிய திருக்கோயில்கள்‌; அதாவது, 10,000 ரூபாய்க்கும்‌ குறைவாக ஆண்டு வருமானம்‌ உள்ள திருக்கோவில்களிலும்‌, சிறிய மசூதிகளிலும்‌, தர்க்காக்களிலும்‌, தேவலாயங்களிலும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களின்‌ அனுமதியுடன்‌ 10.8.2020 முதல்‌ பொதுமக்கள்‌ தரிசனம்‌ அனுமதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சிப்‌ பகுதியில்‌ இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம்‌ பெற வேண்டும்‌. மற்ற மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்‌ தலைவரிடம்‌ பெற வேண்டும்‌.

அரசு வெளியிடும்‌ நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும்‌ ஒட்டுநர்‌ பயிற்சி பள்ளிகள்‌ 10.8.2020 முதல்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கொரோனா நோய்‌ பரவலை கட்டுப்படுத்த, அரசின்‌ நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள்‌ கடைபிடிக்கவும்‌, ஒத்துழைப்பு வழங்கவும்‌ பொதுமக்களை அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.