ஊரடங்கு உத்தரவால் தவித்த மகனை 1400 கிமீ ஸ்கூட்டியில் அழைத்து வந்த வீரத்தாய்
- IndiaGlitz, [Friday,April 10 2020]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் 1400 கிலோ மீட்டருக்கு அப்பால் ஊரடங்கு உத்தரவு காரணமாக தவித்த மகனை ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்ற இளைஞர் மருத்துவ பயிற்சிக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர் சொந்த ஊர் திரும்பாமல் மாட்டிக்கொண்டார். இதனைக் கேள்விப்பட்ட அவரது தாய் தனது மகனை மீட்க தனது ஸ்கூட்டியில் பயணம் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் காவல்துறையினர்களிடம் சென்று அனுமதி அட்டை வாங்கி கொண்டு ஸ்கூட்டியிலேயே மகனை மீட்க ஐதராபாத்தை நோக்கி சென்றார்.
தனி நபராக இரவு பகல் பாராமல் தைரியமாக ஸ்கூட்டியில் ஐதராபாத் சென்ற அந்த தாய், அங்கிருந்த தனது மகனை அழைத்து கொண்டு மீண்டும் தனது சொந்த ஊர் நோக்கி பயணம் செய்தார். ஏப்ரல் 6ஆம் தேதி அவர் பயணத்தை தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி மகனுடன் பத்திரமாக வீடு திரும்பினார். இதுகுறித்து அந்த தாயார் கூறும்போது ’ஒரு ஸ்கூட்டியில் தனியாக இரவில் பயணம் செய்வது என்பது கடினமான விஷயம்தான். ரொம்ப பயமாக இருந்தது. இருப்பினும் மகனை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் எனது அனைத்து பயத்தையும் போக்கியது என்று அந்த தாய் கூறியுள்ளார். மகனை மீட்க 1400 கிமீ தனி ஆளாக சென்ற வீரத்தாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது