'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் மரணம் எதிரொலி: தடை விதித்த தெலுங்கானா அரசு..!
- IndiaGlitz, [Friday,December 06 2024]
நேற்று வெளியான ’புஷ்பா 2’ படம் பார்க்க வந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதை அடுத்து, இனி தெலுங்கானா மாநிலத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவான ’புஷ்பா 2’ படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டமாக திரண்டனர்.
அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும், அவரது மகனும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இனிமேல் எந்த படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படாது என அமைச்சர் கோமதி ரெட்டி தெரிவித்தார். ’பாகுபலி 2’, ’ஆர் ஆர் ஆர்’ போன்ற பெரிய படங்களுக்கு மட்டும் அதிகாலை சிறப்பு காட்சி அனுமதிக்கப்பட்டது. அதே போல ’புஷ்பா 2’ படத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் நேற்று ஒரு உயிர் பலியானதன் எதிரொலியாக தெலுங்கானா அரசு இனிமேல் எந்த படத்திற்கும் சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று அறிவித்தது. இது திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.