கொரோனா பாதிப்பை மறைத்த தெலுங்கானா டிஎஸ்பி: மகனையும் தாக்கியதால் பரபரப்பு
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
தெலுங்கானா மாநில காவல்துறை டிஎஸ்பி ஒருவருக்கும் அவருடைய மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்ததை முறையாக தெரிவிக்காமல் அதற்குரிய பரிசோதனைகளையும் செய்யாமல் இருந்ததன் விளைவாக தற்போது இருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.
இதனையடுத்து டிஎஸ்பி மற்றும் அவரது மகன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மார்ச் மாதம் 18 ஆம் தேதி லண்டனிலிருந்து டிஎஸ்பி மற்றும் அவரது மகன் தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர். ஆனால் இருவருமே இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளிக்காமல் இருந்துள்ளனர் என்பதும் வீட்டில் தனிமைப்படுத்தலை கடைபிடிக்காமல் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் டிஸ்பியின் மகன் சலூன் கடை மற்றும் ஒருசில குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருப்பதாக தெரிய வந்துள்ளதால் அவருடைய மகனால் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல் துறையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு டிஎஸ்பி அவர்களே பொறுப்பின்றி நடந்துகொண்டதால் தெலுங்கானா மாநில மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும், தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால் முதல்வரின் எச்சரிக்கையை காவல்துறை அதிகாரி ஒருவரே உதாசீனப்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.