ராணுவத்தை அழைப்பேன், வெளியே நடமாடினால் கண்டதும் சுட உத்தரவு: முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து இந்திய மக்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும் மற்றும் மாநில முதலமைச்சர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் சற்று கடுமையான எச்சரிக்கையை தமது மாநில மக்களுக்கு விடுத்துள்ளார். மத்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு உத்தரவை தெலுங்கானா மாநில மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு கடைபிடிக்கவில்லை என்றால் பொதுமக்களை வீட்டுக்குள் முடக்கி வைக்க இராணுவத்தை அழைக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்
அதுமட்டுமின்றி அமெரிக்காவைப் போல் சட்டங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வந்தால் கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் தெலுங்கானா மாநிலத்தில் பலரும் சாலைகளில் எந்தவித பயமுமின்றி நடமாடி வருகின்றனர் என்றும் கொரோனா வைரஸ் குறித்த சீரியஸ் இன்னும் மக்களுக்கு புரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருந்ததை அடுத்து, முதல்வர் இந்த கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது