சாலை விபத்து: ஒரே காரில் பயணித்த 2 நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம்
- IndiaGlitz, [Thursday,April 18 2019]
ஐதராபாத் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று இரண்டு தொலைக்காட்சி நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் தங்களது படப்பிடிப்பு முடித்துவிட்டு, ஒரே காரில் வீட்டிற்கு செல்வதற்கு பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற கார் விகாராபாத்தில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக ஒரு லாரி வந்தது. அந்த லாரியின் மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் காரை திருப்பியபோது, கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நடிகைகள் அனுஷா ரெட்டி மற்றும் பார்கவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். அவருடன் காரில் பயணித்த டிரைவர் சாக்ரிவீர் மற்றும் வினய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.