இதே நிலைமை நமக்கும் ஏற்படலாம்... 'அயலான்' ரிலீஸ் எதிர்ப்பாளர்களுக்கு விநியோகிஸ்தர் எச்சரிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ மற்றும் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள் தெலுங்கு மாநிலங்களில் வெளியாகவில்லை. ஒரு வாரம் கழித்து தான் அங்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களின் படங்கள் அதே தேதிகளில் ரிலீஸ் ஆவதால் தமிழ் படங்களை வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விநியோகிஸ்தர் மகேஷ்வர் விடுத்துள்ள எச்சரிக்கையில் ‘அயலான்’ படத்தை ஒரே நாளில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பு செய்திருந்தோம். ஆனால் இப்போது எழுந்து உள்ள சர்ச்சையிலிருந்து விலகி இருக்க விரும்புகிறோம். ஒரு சில மீடியாக்கள் வேண்டுமென்றே தனிப்பட்ட நபரை குற்றம் சாட்டி வருகின்றன.

தெலுங்கு திரையுலகம் தற்போது பான் -இந்தியா மற்றும் பான் -உலகம் என வளர்ந்து கொண்டிருக்கிற நிலையில் எதிர்மறை எண்ணங்களை கொண்ட சிலரால் தெலுங்கு திரை உலகிற்கு ஆபத்து ஏற்படும் என்பதை யோசிக்க வேண்டும். நம்முடைய படங்களும் பக்கத்து மாநிலங்களில் வெளியாகும் போது இதே போன்ற பிரச்சனை ஏற்படும். தெலுங்கு திரைப்படங்களை வெளியிட அங்கும் எதிர்ப்புகள் உருவாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

தெலுங்கு திரை உலகத்திற்கு இது மாதிரியான சர்ச்சைகள் நல்லதல்ல, என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து நான் ஆலோசனை சொல்ல போவதில்லை. ஆனால் என்னுடைய வேதனையை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.