ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை: இயக்குனர் கைது

  • IndiaGlitz, [Thursday,August 17 2017]

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே திரையுலகினர்களின் மத்தியில் இன்னும் விடுபடாத நிலையில் தெலுங்கு திரையுலகின் நடிகை ஒருவரை ஓடும் காரில் நடிகர் மற்றும் இயக்குனர் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் படப்பிடிப்பு ஒன்றுக்காக ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் ஆகியோர் காரிலேயே செல்லலாம் என்று கூறி நடிகையை அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கார் பீமாவரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நடிகரும் இயக்குனரும் அந்த நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இந்த விஷயத்தை வெளியே கூறினால் சினிமா வாய்ப்பே இல்லாமல் செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் சென்ற கார் லாரி ஒன்றில் லேசாக உரசியதால் நின்றுவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனடியாக அங்கிருந்து தப்பித்த நடிகை தனது நண்பர்களுக்கு தான் இருக்கும் இடத்தை தெரிவித்து அவர்களுடைய உதவியால் தப்பித்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் இயக்குனர் மற்றும் நடிகர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சலபதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள நடிகர் ஸ்ருஜனை காவல்துறையினர் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.