ரோலக்ஸ் தம்பி கேரக்டர்.. ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட பிரபல நடிகரின் மகன்.. அதன் பின் ஏற்பட்ட அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’விக்ரம் 2’ படத்தில் ரோலக்ஸ் தம்பி கேரக்டரில் நடிக்க வைப்பதாக பிரபல நடிகரை ஏமாற்றி பணமோசடி செய்திருக்கும் தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடிப்பில் அசத்தி இருப்பார் என்பது தெரிந்ததே. மேலும் ’விக்ரம் 2’ படம் விரைவில் உருவாகும் என்றும் அதில் ரோலக்ஸ் கேரக்டர் வில்லனாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ’விக்ரம் 2’ படத்தில் ரோலக்ஸ் தம்பியாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜியின் மகனிடம் லோகேஷ் மேனேஜர் என்று ஒருவர் தொடர்பு கொண்டதாகவும் இதற்காக ஆடிசனுக்கு வர சொன்னதாகவும், புகைப்படம் அனுப்புமாறும் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அவர் புகைப்படத்தை அனுப்பிய நிலையில் நீங்கள் ரோலக்ஸ் தம்பி கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டீர்கள், உடைகள் வாங்குவதற்கு 30,000 பணம் வேண்டும் என்று கேட்ட நிலையில் அவரும் உடனே அனுப்பி உள்ளார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக தெரிகிறது. இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதாக பிரம்மாஜியின் மகன் உணர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.