ரஜினியின் திரையுலக குரு காலமானார்.
- IndiaGlitz, [Saturday,August 03 2019]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திரையுலகில் அறிமுகப்படுத்திய குரு கே.பாலசந்தர் என்றால் ரஜினிக்கு நடிப்பு பயிற்சி அளித்த குரு நடிகர் தேவதாஸ் கனகலா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னையில் 'மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்' என்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியை நிறுவி நடத்தி வந்தார். இந்தப் பள்ளியில்தான் ரஜினிகாந்த் , சிரஞ்சீவி, ராஜேந்திர பிரசாத், நாசர் உள்பட பலர் பயிற்சி பெற்று அதன் பிறகு திரையில் சூப்பர் ஸ்டாராக மாறினர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த தேவதாஸ் கனகலா நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 75. இவர் நடிப்பு பயிற்சி நடத்தியது மட்டுமின்றி சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இவரது மகள் சுமா என்பவர் டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்பதும் இவரது மகன் ராஜீவ் கனகலா என்பவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறைந்த தேவதாஸ் கனகலாஅவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது