குறுகிய மனப்பான்மையுடன் இருக்க வேண்டாம்.. தமிழ் சினிமா உலகினருக்கு பிரபல தெலுங்கு நடிகர் அறிவுரை..!
- IndiaGlitz, [Wednesday,July 26 2023]
தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் அப்பொழுதுதான் உலகளாவிய திரைப்படங்களை தர இயலும் என்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழ் சினிமா உலகினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் உருவான ’வினோதயா சித்தம்’ என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ’ப்ரோ’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. தமிழில் சமுத்திரக்கனி நடித்த கேரக்டரில் பவன் கல்யாண் நடித்துள்ள நிலையில் இந்த படத்தை சமுத்திரக்கனியை இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் அதில் பவன் கல்யாண் பேசிய போது தமிழ் சினிமா உலகினருக்கு சில அறிவுரைகளை கூறினார். ’நம் மக்களுக்கு மட்டும் தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது, அது நம்மை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விடும். இது போன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வந்து அனைவரும் ஒன்றாக பணி புரிய வேண்டும். அப்போதுதான் உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவில் தர முடியும் என்று கூறினார்.
மேலும் தெலுங்கு சினிமா இன்று அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றுக் கொண்டதால் தான் செழிப்பாக இருக்கிறது என்றும் ’ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களை தர முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கு படங்களை இயக்குகிறார், ஏஎம் ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் படங்களை தயாரித்து உள்ளார் என்றும் அவர் உதாரணம் கூறினார்.
தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களை மட்டுமே தமிழ் படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் பெப்சி புதிய விதியை அறிவித்ததை அடுத்து பவன் கல்யாண் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.