குறுகிய காலத்தில் பிரபலமாக சீரியல் நடிகை செய்த விபரீதம்: தற்கொலையில் முடிந்ததால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

குறுகிய காலத்தில் பிரபலமாக சீரியல் நடிகை ஒருவர் செய்த விபரீத முயற்சி, அவரை தற்கொலை வரை கொண்டு போய் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சேஜல் சர்மா. 25 வயதான இவர் மும்பைக்கு வந்து சினிமா வாய்ப்புகளை பெற முயற்சி செய்தார். முதலில் சின்னத்திரை தொடர்களில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் அடுத்ததாக பாலிவுட்டில் நடிகையாக முயற்சி செய்தார்.

இந்த நிலையில் நடிகை சேஜல் சர்மாவுக்கு ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவர் அறிமுகமானார். அவரது பாலிவுட் ஆசையை புரிந்து கொண்ட ஆதித்யா, அவரிடம் பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலமடைந்து பாலிவுட் வாய்ப்பை பெறலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். இதனை நம்பி ஆதித்யாவிடம் பில்லி சூனியம் செய்வதற்காகத் தான் சம்பாதித்து வைத்திருந்த மொத்த பணத்தையும் கொடுத்துள்ளார். மேலும் ஆதித்யாவை அவர் ஒரு கட்டத்தில் காதலித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் தனது பணத்தை பிடுங்கவே பில்லி சூனியம் போன்றவற்றை கூறி தன்னை ஏமாற்றியது சேஜல் சர்மாவுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் சர்மா தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை குறித்து சேஜல் சர்மாவின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், ஆதித்யாவின் மோசடியை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். அவர் மீது பில்லி சூன்யம் என பணம் பறித்து மோசடி செய்தது, தற்கொலைக்கு தூண்டியது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.