ஆன்லைன் ரம்மி விளையாடினால் கைது! அரசின் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

கடந்த சில வருடங்களாகவே ஆன்லைனில் ரம்மி விளையாடும் வழக்கம் பொதுமக்களுக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விளம்பரத்தில் பிரபல நடிகர் ஒருவரே நடித்துள்ளதால் இந்த பழக்கம் மிக அதிகமானவர்களிடம் பரவியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், இதில் பணத்தை இழப்பவர்களே அதிகம்.

இந்த நிலையில் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் மூலம் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதற்கு தெலங்கானா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. அரசின் தடையை மீறி ரம்மி விளையாடுவோர் கைது செய்யப்படுவர் என்று தெலுங்கானா அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்த சட்டதிருத்தத்திற்கு கடந்த ஜூன் 17ஆம் தேதி தெலுங்கானா அமைச்சரவை ஓப்புதல் கொடுத்த நிலையில் இந்த சட்டதிருத்தத்தில் தெலுங்கானா கவர்னர் நரசிம்மன் தற்போது கையெழுத்திட்டுள்ளதால் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்த விளையாட்டு காரணமாக பலர் பணத்தை இழப்பது மட்டுமின்றி கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்களை மீட்கும் பொருட்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெலுங்கானா அரசு விளக்கமளித்துள்ளது. தெலுங்கானாவை அடுத்து தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளும் இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

பாதி மூளை, பாதி அதிர்ஷ்டம் என விளம்பரப்படுத்தப்படும் இந்த விளையாட்டில் ஈடுபட்டு பலரும் பொருளாதார ரீதியில் பணத்தை இழப்பதுடன், தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து, ஆன்லைனில் ரம்மி விளையாட தெலங்கானா அரசு தடை விதித்துள்ளது.