60 அடி ஆழ கிணற்றில் இறங்கி ரிஸ்க் எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்! குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நபர்களின் உயிர்களை காப்பாற்ற அந்த பகுதி இன்ஸ்பெக்டர் ஒருவர் ரிஸ்க் எடுத்து 60 அடி ஆழத்தில் உள்ள கிணற்றில் இறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள சுஜன்ரெட்டி என்பவருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் கிணற்றில் தூர்வார இறங்கிய இரண்டு ஊழியர்கள் உயிருக்கு போராடி வருவதாக கூறப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் அனுப்பிய சுஜன்ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்தார். கிணற்றில் இறங்கிய இரண்டு ஊழியர்களும் விஷவாயு தாக்கியதாக தெரிய வந்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் வரும் வரை காத்திராமல் கயிறு மூலம் தானே ரிஸ்க் எடுத்து கிணற்றில் இறங்கினார் சுஜன்ரெட்டி.

இதற்குள் தீயணைப்பு துறையினர்களும் சம்பவ இடத்திற்கு வந்துவிட, அவர்கள் அனுப்பிய ஏணியின் மூலம் மயங்கி கிடந்த இரண்டு ஊழியர்களையும் சுஜன்ரெட்டி மேலே கொண்டு வர உதவி செய்தார். அதன்பின்னர் மூவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி இன்ஸ்பெக்டர் சுஜன்ரெட்டி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.