2 மாதமா கோமாவில் இருந்தவரை குணப்படுத்திய சிக்கன் துண்டு… சுவாரசியச் சம்பவம்!!!
- IndiaGlitz, [Tuesday,November 10 2020]
ஒருவர் உடல் நலமின்றி கோமாவிற்கே சென்றாலும் அவருக்குப் பிடித்தமான விஷயங்களை கேட்கும்போது அல்லது பிடித்தமானவர் அருகில் இருக்கும்போது அவர் சுயநினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறது. இந்த விஷயத்தை பொதுவாக எல்லா சினிமாக்களிலும் பார்க்க முடியும். நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் கூட இப்படி ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். ஆனால் உண்மையிலே அதுபோன்ற ஒரு சுவாரசியச் சம்பவம் தைவான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் சென்ற 18 வயது சிறுவன் ஒரு விபத்தில் சிக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறான். இதனால் அவர் கோமாவிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி கோமா நிலைமைக்கு சென்று 62 நாட்கள் கடந்த நிலையில் தற்போது அச்சிறுவன் திடீரென்று சுயநினைவுக்கு வந்திருக்கிறான். அப்படி சுயநினைவுக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது சிக்கன் துண்டுகள் என்றால் வியப்பாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அப்படித்தான் நடந்திருக்கிறது.
விபத்தில் சிக்கிய 18 வயது சிறுவன் சியுவிற்கு அவனது உள் உறுப்புகளில் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் ஹ்சிஞ்சு கவுண்டி பகுதியில் உள்ள டன் யென் மருத்துவ மனையில் சியு கடந்த 62 நாட்களாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறான். இந்நிலையில் அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சியுவின் பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தபோது சியுவின் சகோதரர் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக அடிக்கடி சியுவிற்கு பிடித்த சிக்கன் ஃபில்லெட்டைப் பற்றி பேசியிருக்கிறார்.
ப்ரோ உனக்கு பிடித்த சிக்கன் ஃபில்லெட்டை நான் சாப்பிட போகிறேன் என சியுவின் சகோதரர் சொல்லி இருக்கிறார். இதனால் சியுவின் பல்ஸ் ரேட் அதிகரித்து இருக்கிறது. இதை கவனித்த சியுவின் சகோதரர் அடிக்கடி சிக்கல் ஃபில்லேட்டை பற்றியே பேசியிருக்கிறார். இதனால் வெகு விரைவில் சியு குணமைடைந்து வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் மீது சியு கொண்டிருந்த ஆர்வம்தான் தற்போது சுயநினைவுக்கு வரக் காரணமாக இருந்திருக்கிறது. இச்சம்பவம் தற்போது கடும் வைரலாகி இருக்கிறது.