ஒரு நாள் முதல்வர் பாணியில்… ஒரு நாள் அதிபர்…. உண்மைச் சம்பவம்!!!
- IndiaGlitz, [Thursday,October 08 2020]
பின்லாந்து அதிபராக 16 வயது சிறுமி ஆவா முர்டே இன்று பதவியில் அமர்ந்து இருக்கிறார். இச்சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜுன் தமிழக முதல்வரிடம் நேர்காணல் எடுப்பார். அப்போது ஏற்படும் வாக்குவாதத்தால் முதல்வரின் சவாலை ஏற்று ஒரு நாள் முதல்வராகப் பதவி வகிப்பார் அர்ஜுன். அதேபோல ஒரு சம்பவம் பின்லாந்து நாட்டில் அதுவும் அதிபர் பதவிக்கு நடைபெற்று இருக்கிறது.
பின்லாந்து நாட்டின் அதிபராக சன்னா மரின் (34) கடந்த டிசம்பர் மாதத்தில் பதவியேற்றார். அவர் பதவி ஏற்றதில் இருந்தே பின்லாந்தில் பல்வேறு முன்னேற்றமான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் உலகத்தின் பார்வையில் பின்லாந்தின் மதிப்பும் உயர்ந்து இருக்கிறது. அதோடு உலகிலேயே வயது குறைந்த அதிபராகவும் சன்னா மரின் பணியாற்றி வருகிறார். பின்லாந்தில் தற்போது நடைமுறையில் இருப்பது கூட்டாட்சி முறையிலான அரசியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியான அரசியல் பதவியில் இன்று ஒரு நாள் மட்டும் 16 வயதே ஆன ஆவா முர்டே அமர்ந்து இருக்கிறார். பெண்கள் உரிமைகளை மேம்படுத்துவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இவர் அதிபர் பதவியில் அமர்ந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து தெரிவத்த ஆவா முர்டே இன்று எனது வாழ்நாளில் மிகவும் உற்சாகமான நாள். மேலும் அதிபர் என்ற முறையில் “இந்த நாளில் சட்டத்தைப் பற்றி சில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்று அந்நாட்டின் நாடாளுமன்ற அவைக்கு முன்பு நின்றுகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்து இருக்கிறார்.
மேலும் காலநிலை மற்றும் மனித உரிமை பிரச்சனைகள் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்யும் மாணவியான இவர் அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் வர்த்தக அமைச்சர்களுடன் இணைந்து வெளிநாட்டு வர்த்தகம் குறித்து ஆலோசனையும் செய்திருக்கிறார். இச்சம்பவம் குறித்து “பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும். மேலும் அவர்கள் ஆண்களைப் போலவே தொழில்நுட்பத்திலும் வேறு துறைகளிலும் சிறந்தவர்கள் என்பதை உணர வேண்டும்” தன்னுடைய உற்சாகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.