காதல் பைத்தியக்காரத் தனமான செயலையும் செய்ய வைக்கும்… மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
- IndiaGlitz, [Monday,March 28 2022]
ஆஸ்கர் விழா மேடையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் திடீரென கன்னத்தில் அறைந்த சம்பவம் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு வில் ஸ்மித் மன்னிப்புக் கோரியிருக்கிறார். மேலும் காதல் பைத்தியக் காரத்தனமான செயலையும் செய்ய வைக்கும் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
உலக சினிமா கலைஞர்களை கவுரவிக்கும் 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை தொகுத்து வழங்கிவந்த கிறிஸ் ராக் திடீரென அங்கிருந்த வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடியைப் பார்த்து கிண்டல் செய்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ஜடா பிங்கெட் தலைமுடியை இழந்திருந்தார். இதனால் முதலில் சிரித்துக் கொண்டிருந்த வில் ஸ்மித் பிறகு திடீரென கோபம் வந்து விழா மேடைக்கே சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.
இதுகுறித்த வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியாகி விமர்சிக்கப்பட்ட நிலையில் வில் ஸ்மித் தனது செயலுக்குத் தற்போது மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், நான் ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது சக நாமினிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இது ஒரு அழகான தருணம், விருதை வென்றதற்காக நான் அழவில்லை.
இது எனக்கு விருது வெல்வதற்காக அல்ல. இது மக்கள் அனைவருக்கும் ஒரு ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதாகும். நாம் கலையை நேசிக்கிறோம். ரிச்சர்ட் வில்லியம்ஸைப் பற்றி அவர்கள் கூறியதுபோல் நான் பைத்தியக்கார தந்தையைப் போல் இருக்கிறேன். காதல் உங்களை பைத்தியக்காரத் தனமான செயல்களைச் செய்ய வைக்கும் எனப் பேசியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனைகளான செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸின் தந்தையும் பயிற்சியாளருமான ரிச்சர்ட் வில்லியம்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் வில் ஸ்மித் “கிங் ரிச்சர்ட்“ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காகத்தான் அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. 2 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட வில் ஸ்மித் தற்போது முதல் முறையாக ஆஸ்கரைத் தட்டிச் சென்றுள்ளார். இதனால் விழா மேடையில் கண்ணீர் மல்க விருதைப் பெற்றுக்கொண்ட அவர் கிறிஸ் ராக்கை அறைந்ததற்காகத் தற்போது மன்னிப்புக் கேட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.