உயிரோடு இருக்கும் இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: கணவர் குடும்பத்தினர் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உயிரோடு இருக்கும் இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது பெரம்பலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த ரோஷினி என்ற 23 வயது பெண்ணுக்கும் அவரது தாய் மாமா வீரராகவன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. ரோஷினியின் கணவர் வீரராகவன் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மன அழுத்தம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து ரோஷினி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி விட்டார். இந்த நிலையில் திருமணத்தின்போது ரோஷினிக்கு கொடுத்த நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை திரும்ப கேட்டு ரோஷனின் பெற்றோர் வீரராகவன் பெற்றோரிடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் வீரராகவன் பெற்றோர் அதை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று திடீரென பெரம்பலூர் முழுவதும் ரோஷினி இறந்து விட்டதாக கூறி அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை கண்ட ரோஷினியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் துக்கம் விசாரிக்க அவருடைய வீட்டுக்குச் சென்றபோது அங்கே அவர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ரோஷினி தனது பெற்றோருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் குடும்பத்தினர் தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
உயிருடன் இருக்கும் இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்கள் யார்? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments