தமிழக வீரர் நடராஜன் அறிமுகப்போட்டி அசத்தல் ஆட்டம்… இந்திய அணி ஆறுதல் வெற்றி!!!
- IndiaGlitz, [Wednesday,December 02 2020] Sports News
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறது. அதில் முதலாவதாக ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் 0-2 என்ற கணக்கில் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் போட்டியை எதிர்க்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு கேட்டுக் கொண்டார். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள், ஜடஜோ 66 ரன்களை எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்துக்கு 92 ரன்களை குவித்தார். சர்வதேசப் போட்டிகளில் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வீரர் தங்கராசு நடராஜன் இந்தப்போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகளில் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற வித்தியாசத்தில் தட்டிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது..