விடியலுக்கு வித்திட்ட ஜாம்பவான்களுக்கு… சிறப்பு தினம் இன்று!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒருநாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது எனப் பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அத்தகைய இளைஞர்களை ஆக்கச் சக்தியாக உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். களி மண்ணைக்கூட உருவப் பொம்மையாக மாற்றுவதற்கு ஒரு சிறந்த கலைஞன் தேவைப்படுகிறான். அதைப்போல இளைஞர் சமுதாயத்தை வல்லமைக் கொண்டவர்களாக மாற்றுவதற்கு இந்த ஆசிரியர்கள் மட்டுமே உறுதுணையாக இருக்கின்றனர். அத்தகைய ஆசிரியப் பெருமக்களை இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிறப்பித்து வருகிறோம்.
இதேபோல உலக நாடுகள் அனைத்திலும் வெவ்வேறு தினங்களில் ஆசிரியப் பெருமக்களை சிறப்பிக்கின்றனர். நம்முடைய இந்தியாவில் செப்டம்பர் 5 ஆம் தேதியை தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாம் குடியரசுத் தலைவராகப் பணியாற்றியவரும் சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் செப்டம்பர் 5. பாரதரத்னா விருது விருதுபெற்ற இவருடைய பெயர் 27 முறை நோபல் பரிசுக்காகவும் 16 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்காகவும் 11 முறை அமைதிக்கான நோபல் பரிசுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
20 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் சிறந்த தத்துவஞானி, சிறந்த கல்வியாளர் என்ற பெருமைக்கும் உரியவர். 1888 இல் பிறந்த இவருக்கு 1954 இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. கல்வியறிவில் ஒப்பில்லா ஆசானாக விளங்கிய இவர் பிறந்தது ஆந்திர மாநிலத்தில். ஆனால் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில்தான் தன்னுடைய முதுகலை தத்துவவியல் படிப்பை முடித்து இருக்கிறார்.
மைசூர் பல்கலைக் கழகம், கொல்கத்தா பல்கலைக் கழகம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் தன்னுடைய ஆசிரியப் பணியைத் தொடந்திருக்கிறார். பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம், ஆந்திரப் பிரதேச பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தராகவும் பணியாற்றி இருக்கிறார். அதைவிட சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய பேற்றையும் நாம் பெற்றிருக்கிறோம். இந்தியத் தத்துவத்தின் பெருமையையும் செழுமையையும் தன்னுடைய எழுத்துக்களால் பதிவுசெய்து அழியாத வரலாற்று ஆதாரத்துக்கு வித்திட்டவர். இத்தகைய பெருமை வாய்ந்த கல்வியாளர் பிறந்த தினத்தில் நம்முடைய ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் சிறப்பு செய்கிறோம். அடுத்த தலைமுறை மாணாக்கரையும் இளைஞர் சமுதாயத்தையும் தம்முடைய ஆற்றலால் வளர்த்துவிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments