ஆசிரியர் டார்ச்சர் எதிரொலி: 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

  • IndiaGlitz, [Sunday,November 24 2019]

நம் முன்னோர்கள் அம்மா அப்பாவிற்கு அடுத்த இடத்தில் குருவை வைத்து, குரு என்பவர் ஒரு உன்னதமான உறவு என்பது போல் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் தற்போது ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர் என்பது ஒரு கொடுமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் ஐஸ்வர்யா என்ற மாணவி சமீபத்தில் தனது உறவினர் இறந்ததால் பள்ளிக்கு தகவல் கொடுக்காமல் விடுமுறை எடுத்து உள்ளார். இதனால் அவருடைய வகுப்பு ஆசிரியர் ஞானப்பிரகாசம், ஐஸ்வர்யாவுக்கு 150 தோப்புக்கரணம் போடும் தண்டனை கொடுத்துள்ளார். இதனையடுத்து தோப்பு காரணங்கள் போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா மயங்கி விழுந்ததாகவும் ஆனாலும் அதனை கூட கண்டுகொள்ளாமல் ஆசிரியர் ஞானப்பிரகாசம் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து சக மாணவிகள் அவரை மயக்கம் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா மீது அவ்வப்போது கடுமையாக ஆசிரியர் ஞானப்பிரகாசம் நடந்துகொண்டதாகவும் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா மனம் உடைந்தால் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானப்பிரகாசத்தை கைது செய்ய பள்ளிக்கு சென்றனர். ஆனால் ஞானப்பிரகாசம் தலைமறைவாகிவிட, அவரை காப்பாற்றும் முயற்சியில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தலைமை ஆசிரியரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் ஞானப்பிரகாசம் தேடி வருகின்றனர்.

மாணவ மாணவியர்களுக்கு அன்பு, பாசத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே கடுமையாக நடந்துகொண்டதால் பதினோராம் வகுப்பு பெண் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இனியாவது ஆசிரியர்கள் தங்கள் பொறுப்புணர்ச்சியை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும் என்றும் கண்டிப்பு என்ற பெயரில் மனிததன்மையற்று நடக்கக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.