சிக்னல் கிடைக்காததால் மரத்தில் ஏறி ஆன்லைனில் பாடம் நடத்திய ஆசிரியர்
- IndiaGlitz, [Thursday,April 23 2020]
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல், பாடம் படிக்க முடியாமல் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பல கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்குவங்கத்தை சேர்ந்த சுப்ராட்டா என்ற ஆசிரியர் கடந்த சில நாட்களாக தனது மொபைல் போன் மூலம் வீடியோ கான்ப்ரன்ஸில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இண்டர்நெட் சிக்னல் கிடைக்காததால் அவரால் பாடம் நடத்த முடியவில்லை. வீட்டின் ஒவ்வொரு பகுதியாக சென்று சிக்னல் கிடைக்க அவர் முயற்சி செய்தார். ஆனால் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதிரடி முடிவெடுத்த ஆசிரியர் அருகில் இருந்த மரம் ஒன்றில் ஏறி சிக்னல் கிடைக்கின்றதா? என்று பார்த்தபோது சிக்னல் கிடைத்தது. உடனே மரத்தில் உட்கார்வதற்காக இடம் தயார் செய்து காலை முதல் மாலை வரை அதாவது காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை மரத்தில் உட்கார்ந்தே பாடம் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களுடன் கூடிய செய்தி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.