கமல்ஹாசனை சந்திக்க மறுத்த பகவான் ஆசிரியர்
- IndiaGlitz, [Friday,July 20 2018]
சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த பகவான் என்ற ஆசிரியருக்கு இடமாற்ற உத்தரவு வந்தபோது அந்த பள்ளியில் படித்த மாணவ, மாணவர்களின் உணர்ச்சிமிக்க வேண்டுகோள் காரணமாக அவருடைய இடமாறுதல் ரத்து செய்யப்பட்டது. பகவான் ஆசிரியர் அந்த பள்ளியை விட்டு போகக்கூடாது என்று மாணவ, மாணவியர் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத கண்ணீர் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பகவான் ஆசிரியருக்கு ஏற்கனவே தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க விரும்பி ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்தார். செய்தியாளர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக கமல்ஹாசன் தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது கமல்ஹாசனின் அழைப்பை பகவான் ஆசிரியர் ஏற்று கொள்ளவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து பகவான் ஆசிரியர் கூறியபோது கமலஹாசன் என்னை கவுரப்படுத்த விரும்புவதாகவும் அதற்காக நான் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் என்னிடம் கூறினார். ஆனால் கமல்ஹாசனின் அழைப்புக்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். நான் ஒரு அரசு பணி ஊழியர். கமலஹாசன் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். ஒரு அரசியல் கட்சி தலைவரை அரசு ஊழியரான நான் சந்தித்தால் சரியாக இருக்காது என்பதால் அந்த அவருடைய அழைப்பை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார். இவர் மீது ஏன் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளியில் இருந்து செல்ல அனுமதிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது.