2025ஆம் ஆண்டு வரை 'வொர்க் ஃப்ரம் ஹோம்' தான்: டிசிஎஸ் அதிரடி முடிவு?
- IndiaGlitz, [Monday,April 27 2020]
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதால் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையை கையாண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் மீண்டும் அலுவலகம் திரும்பலாம் என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் 75% பணியாளர்கள் வரும் 2025ஆம் ஆண்டு வரை வீட்டில் இருந்தே பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி ஒரு நிலை வந்தால் அதனை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தின் 25%க்கு அதிகமான ஊழியர்கள் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டிய தேவை இருக்காது என்றும், ஊரடங்கு அனுபவத்திற்குப் பின் ஊழியர்கள் 25% நேரத்தை எங்கள் அலுவலகங்களில் செலவிட்டால் போதுமானது என்று நான் நினைக்கிறேன் என்றும், ஊரடங்கு காலத்தில் டி.சி.எஸ் தனது 90% பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை வாங்க முடிந்துள்ளது என்பதால் இதை தொடரவும் தங்களால் முடியும் என்றும் கூறியுள்ளார்.
டி.சி.எஸ் நிறுவனத்தில் உலகளவில் 4.48 லட்சம் ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதும், அவர்களில் 3.55 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.