கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூ.500 கோடி கொடுக்கும் டாடா!
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
உலகெங்கும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிவரும் நிலையில் இந்த வைரஸிலிருந்து மக்களை காக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. அதேபோல அரசுகளுக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்து வருகின்றனர். அதில் குறிப்பாக திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் தாராளமாக நிதியை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனம் தற்போது கொரோனாவில் இருந்து மக்களை காப்பதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து டாடா டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
இந்தியாவிலும் உலகெங்கிலும் தற்போதைய நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. இதனை கருத்தில் கொண்டு டாடா ட்ரஸ்ட் குழுமத்தின் நிறுவனங்கள் தேசத்தின் தேவையை உணர்ந்து இந்த நேரத்தில் உதவி செய்ய முன் வருகிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தேவைகளை சமாளிக்கவும், மனிதகுலம் கடினமான சவால்களை எதிர் கொண்டிருக்கும் இந்த நிலையில் டாடா அறக்கட்டளை சார்பில் ரூபாய் 500 கோடி நிதி அளிக்கின்றது.
இந்தப் பணத்தின் மூலம் மருத்துவ பணியாளர்களுக்கு உபகரணம் வாங்குவதற்கும், தனிநபர் சோதனையை அதிகரிக்க கருவிகளை பரிசோதனை செய்வதற்கும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அவர்களுக்கு வசதி அமைத்துக் கொடுப்பதற்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி செய்யவும் பயன்படுத்தப்படும். மேலும் டாடா குழுமத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த வைரஸை எதிர்த்து போராட தயாராக உள்ளது’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.