67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடாவிடமே சென்ற ஏர் இந்தியா நிறுவனம்!
- IndiaGlitz, [Friday,October 01 2021]
ஏர் இந்திய விமான நிறுவனத்தை விற்பதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் டாடா நிறுவனம் அதை ஏலத்தில் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் பொதுவுடைமை நிறுவனங்களுள் ஒன்றாக இருந்துவந்த ஏர் இந்திய விமான நிலையத்தை தனியாரிடம் விற்பதற்கான முயற்சியில் மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. கொரோனா காரணமாக சில மாதம் தள்ளிப்போன இந்த முயற்சி செப்டம்பர் 15 ஆம் தேதி இறுதிச்செய்யப்பட்டு தற்போது ஏலம் நடைபெற்று இருக்கிறது. இந்த ஏலத்தில் டாடா நிறுவனம் வெற்றிப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை மற்றும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் ஏர் இந்திய விமான நிறுவனத்தை கடந்த 1932 ஆம் ஆண்டு 146 விமானங்களுடன் ஜே.ஆர்.டி டாடா உருவாக்கினார் என்ற வரலாறு நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த தனியார் நிறுவனத்தை அரசு பின்னாட்களில் பொதுவுடைமையாக மாற்றியது.
ஆனால் பொதுவுடைமையாக பல காலம் மக்களுக்கு பலனளித்து வந்த இந்த நிறுவனத்தை தற்போது 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மத்தியஅரசு விற்றிருக்கிறது. அந்த நிறுவனம் மீண்டும் டாடாவின் கைகளுக்கே சென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.