‘குடி‘மகன்களுக்கு இனி கொண்டாட்டம்… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Tuesday,December 29 2020]
டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறந்துகொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் பார்கள் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் மது பிரியர்கள் கடும் அவஸ்திப்பட்டு வந்தனர். பின்பு ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டபோது தமிழக டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.
தற்போது டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி பார்களில் 50% இருக்கை வசதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் பார்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் போதுமான இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் பார்களுக்கு வரும் அனைத்து நபர்களின் உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். பார்களின் நுழைவாயிலில் ஹேண்ட் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும். அதோடு கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.